தேவகவுடா பேரனின் வெற்றி செல்லாது: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!
மதசார்பற்ற ஜனதாதள எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றி செல்லாது என கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் கர்நாடகா அமைச்சர் ஹெ.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணா, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் ஒரே எம்.பி.யான அவர், இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது இளைய வயதுடைய எம்.பி.யுமாவார்.
இந்த நிலையில், 2019 தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019 மக்களவை தேர்தலின் போது பிரமாணப் பத்திரத்தில், ரூ.24 கோடிக்கும் அதிகமான வருமானத்தை அவர் மறைத்ததாக வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன், 2019 பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகக் கூறி, மதசார்பற்ற ஜனதாதள எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் மூலம், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரஜ்வால் ரேவண்ணா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அல்லது உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும்.