கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா கடிதம் அளித்த நிலையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். மேலும், அமைச்சராக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.  

இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-மஜத கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பதவி விலகல் கொடுத்திருந்த ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. மட்டும் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் சட்டப்பேரவையில் கூட்டணி அரசின் பலத்தை விட எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் பலம் அதிகமாக உள்ளது. 2 சுயேச்சைகள் உட்பட பாஜகவின் பலம் தற்போது 107-ஆக உள்ளது. ஆனால், ஆளும் கூட்டணி அரசின் பலம் 101-ஆக குறைந்துள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் கடந்த 2 வாரங்களாக கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என கடந்த 12-ம் தேதி முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் கூறினார். அதைதொடர்ந்து கடந்த 18-ம் தேதி முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. ஆளுநர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பை சபாநாயகர் நிராகரித்தார். சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என முதல்வர் குமாரசாமி மற்றும் சித்தராமையா ஒப்புதல் என சபாநாயகர் ரமேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா கடிதம் அளித்த நிலையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பெருபான்மையை இழக்கும் பட்சத்தில் ஆளும் கூட்டணி அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்படும்.