முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. என்.மகேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்களாக கர்நாடக அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. அங்கு காங்கிரஸ்- மஜத கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 தனது பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனையடுத்து, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

இந்த வழக்கின் தீர்ப்பில் சபாநாயகருக்கு எதிராக எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கட்டாயப்படுத்தக்கூடாது என தீர்ப்பில் கூறியிருந்தது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி சபாநாயகரின் உத்தரவுபடி குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வரும், நிலையில், அவையின் விவாதம் வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு பல்வேறு குளறுபடிகளை இருப்பதாக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர். அதாவது சட்டப்பேரவை விவகாரத்தில் தலையிடக்கூடாது. அப்படி இருக்கையில் எம்.எல்.ஏ.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என்பதை மட்டும் உச்சநீதிமன்றம் ஏன் கூறியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று ஆளும் கட்சியினர் உச்சநீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இது ஒருபக்கம் இருக்கையில் முதல்வர் குமாரசாமிக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. முதல்வர் மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதை புறக்கணிக்கப்போவதாக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் முடிவு செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பதாக எம்.எல்.ஏ. மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.