கடன் வாங்கி பயிரிட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு! கர்நாடக விவசாயி காவல்துறையில் புகார்
விவசாயி தரணி தனது பண்ணையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாக ஹளேபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஒரு விவசாயி தனது பண்ணையில் விளைந்த தக்காளியைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறார்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள விவசாயி தரணி தனது பண்ணையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயி தரணி கூறுகையில், ஜூலை 4ஆம் தேதி இந்தத் திருட்டு நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தரணி தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டார். முந்தைய சாகுபடியில் நஷ்டம் அடைந்ததால், கடன் வாங்கி தக்காளி பயிரிட்டிருக்கிறார். இந்த நிலையில், தக்காளி திருடு போனதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கவலை தெரிவிக்கிறார்.
"நாங்கள் அவரை அறுவடை செய்ததில் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். அதனால், இந்த முறை தக்காளி பயிரிட கடன் வாங்கி இருந்தோம். எங்களுக்கு நல்ல விளைச்சலும் கிடைத்தது. விலையும் அதிகரித்துள்ளது. இப்போது 50 முதல் 60 மூட்டை தக்காளியைத் திருடிச் சென்றதுடன், எஞ்சிய விளைச்சலையும் திருடர்கள் அழித்துவிட்டனர்" என்று அவர் சொல்கிறார்.
பெங்களூரு சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.120க்கு மேல் விலை போகும் நிலையில், தக்காளியை பறித்து சந்தைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த சமயத்தில் மர்ம நபர்கள் அவற்றைக் களவாடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக விவசாயி தரணி ஹளேபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.