எனக்கும் முதல்வராகும் ஆசை இருக்கு... சரத் பவார் அரசியலில் இருந்து விலக வேண்டும்... அஜித் பவார் ஆவேசம்
ஐந்து முறை துணை முதல்வராக இருந்த தனக்கும் முதல்வராகி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் விருப்பம் இருப்பதாக அஜித் பவார் கூறுகிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அஜித் பவார் தனது பலத்தைக் காட்டும் வகையில் புதன்கிழமை தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித் பவார், மே மாதம் சரத் பவார் ராஜினாமா செய்துவிட்டு, பின் அந்த முடிவைத் திரும்பப் பெற்றது குறித்து விமர்சித்தார்.
“மே மாதம், நீங்கள் ராஜினாமா செய்வதாகவும், கட்சியை மட்டும் கவனித்துக்கொள்ள விரும்புவதாகவும் சொன்னீர்கள். நானும் பிரபுல் படேல், ஹசன் முஷ்ரிப், ஜெயந்த் பாட்டீல் ஆகிய தலைவர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. தேசியத் தலைவராக சுப்ரியா சுலேவின் பெயரை ஒப்புக்கொண்டோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக கூறினீர்கள். ராஜினாமாவை திரும்பப் பெற விரும்பினால், ஏன் ராஜினாமா செய்வதாகக் கூறினீர்கள்?" என்று அஜித் பவார் கேள்வி எழுப்பினார்.
சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் விமான சேவை ஆரம்பம்!
"அவருக்கு (சரத் பவார்) வயது அதிகரித்து வருகிறது. 82-83 வயது ஆகிவிட்டது. நீங்கள் எப்போது விலகிக்கொள்ளப் போகிறீர்கள்? உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்குங்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறோம்." என்ற விவசாயிகள், தொழிலதிபர்கள் கூட அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்கிறார்கள். அரசு வேலைகளில் 58 வயதிற்குள் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பாஜக தலைவர்கள் 75 வயதிற்குள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். புதிய தலைமுறைக்கு உங்கள் ஆசீர்வாதங்களை தாருங்கள். தவறு செய்தால், நீங்கள் சுட்டிக்காட்டலாம்" என்றார்.
சரத் பவார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினால், அதற்கு தான் பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தன்னை ஒரு மோசடிக்காரன் என்று பொதுமக்கள் நினைப்பார்கள் என்றும் அஜித் பவார் கூறினார்.
தனது முதல்வர் ஆசை குறித்து பேசிய அவர், "நானும் மாநிலத்தின் முக்கியத் தலைவர் இல்லையா? ஐந்து முறை துணை முதல்வராக இருந்துள்ளேன். ஆனால், அங்கிருந்து முன்னே செல்லவில்லை. நானும் மாநிலத்தை வழிநடத்தி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த விரும்புகிறேன்" என்றார்.
2004 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, என்சிபி அதன் கூட்டணிக் கட்சியை விட இரண்டு இடங்களை கூடுதலாகப் பெற்றபோது, முதல்வர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்தது தவறு என்று அஜித் கூறினார். "என்சிபி 71 இடங்களைப் பெற்றிருந்தது, காங்கிரஸ் 69 இடங்களைப் பெற்றிருந்தது. ஆனாலும் முதல்வர் பதவி காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்டது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால், 2023 வரை என்சிபியை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருந்திருக்கலாம்" என்றும் அவர் கூறினார்.
2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க என்சிபி நடத்திய பேச்சுக்களைக் குறிப்பிட்ட அஜித் பவார், இப்போது தான் பாஜக ஆட்சியில் இணைந்ததற்கு ஏன் குற்றம் சாட்டுகிறார் என்று கேள்வி எழுப்பினார். கட்சிக்குள் தான் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வந்ததாகக் கூறிய அஜித் பவார், "நான் பல விஷயங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது, பின்வாங்க வேண்டியிருந்தது" என்றும் அவர் கூறினார்.