கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேரின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் ரமேஷ்குமார் மறுத்துவிட்டார்.

 

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 13 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர், சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் மற்றும் சங்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனால், கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆனால், ராஜினாமா கடிதத்தோடு சென்ற எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இல்லாததால், சட்டமன்ற செயலாளரிடம் கடிதங்களை அளித்துவிட்டு சென்றனர். இதுதவிர ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களின் முடிவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் கூட்டணியின் பலம் 103-ஆக குறையும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107-ஆக அதிகரிக்கும் என்ற நிலை இருந்து வந்தது. 

அதேநேரத்தில், சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்திற்கு வந்த சபாநாயகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  நான் இங்குதான் இருக்கிறேன். எம்.எல்.ஏ.,க்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க அனுமதி கேட்கவில்லை. யார் வந்தாலும் எனது அலுவலகத்தில் சந்திப்பேன். அரசியல் சட்டப்படி செயல்படுவேன், என்று கூறினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் 13 பேரின் ராஜினாமாவை ஏற்கவும் சபாநாயகர் ரமேஷ்குமார் மறுத்துவிட்டார்.