13 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் குமாரசாமி மக்களிடம் அனுதாபத்தை பெறும் வகையில் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க இயலவில்லை. 38 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மஜதவும், 79 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. கூட்டணி ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் இறுதியில் தோல்வியில் முடிந்தது. இதனிடையே ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேர வாய்ப்புள்ளதால் அவற்றை தவிர்க்கும்பொருட்டு, அண்மையில் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

  

இந்நிலையில், விஜயநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பான நகலை ஆளுநரிடம் நேரில் சென்று அளித்திருந்தார். இதனையடுத்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் 10 அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது. அதிருப்தியாளர் எம்.எல்.ஏக்கள் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். ஆனாலும், சபாநாயகர் ராஜினாமாவை இன்னும் ஏற்கவில்லை.

 

அதிருப்தி 13 எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா முடிவைத் திரும்ப பெறும்படி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ்-மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறைவதால், ஆளும் கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். பா.ஜ.க.105 இடங்கள் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க.வுக்கும் சமபலம் உருவாகும். தனிப்பெரும் கட்சி என்ற முறையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பெங்களூர் திரும்ப உள்ள கர்நாடக முதல்வர்குமாரசாமி ஆட்சி கவிழும் முன்பே, அனுதாபத்தைப் பெற ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.