கர்நாடகாவில் எம்.எல்.ஏ. ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனக்கு அறிவுறுத்த முடியாது என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். 

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் அடுத்தடுத்து பதவி விலகியதால் முதல்வர் குமாரசாமிக்கு ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் இறுதியில் தோல்விலேயே முடிந்தது.

  

இந்நிலையில், ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் மீது மனுவில் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் சாபநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும். மேலும், பெங்களூரு செல்லும் எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய பாதுாப்பு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

அதேபோல் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இன்றைக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக அறிக்கை நாளை காலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சபாநாயகர் ரமேஷ்குமார் முறையீடு செய்தார். அதில், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது. மேலும், இந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இன்றே விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம் இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.