கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்: அரசு ஊழியர்கள் ஹேப்பி!
கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. சில மாநிலங்களில் அது பரிசீலனையில் உள்ளது.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தலுக்கு முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக போராடி வந்த அரசு ஊழியர்களை சந்தித்தேன். அப்போது, ஆட்சிக்கு வந்த பின் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்தேன். அதை உறுதி செய்யும் வகையில், ஏப்ரல் 1, 2006க்கு முன்பாக அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு பணி ஆணை வழங்கி வேலையில் அமர்த்தப்பட்ட 13,000 பேருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.” என பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அமலப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பது கவனிக்கத்தக்கது.
கார் விபத்தில் சிக்கிய மம்தா பானர்ஜி: தலையில் காயம்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியமும் பணிக்கொடை போன்ற பயன்களும் அளிக்கப்பட்டன. ஆனால், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தப் பயன்கள் நிறுத்தப்பட்டன.
ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து பணி ஓய்வுக்குப் பிறகு தரப்படும் CPS Contributory Pension Scheme (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) எனும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது. எனவே, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம், ஜெய்பூர் பயணம்!