கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் தொடர்பான அரசாணை அனைத்து சங்கங்களுக்கும் பொருந்தும் என்றும், அந்த உத்தரவில் ஆர்எஸ்எஸ் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகளுக்கு மத்தியில், கர்நாடக முதல்வர் சித்தராமையா திங்களன்று, அந்த அமைப்புக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சங்கங்கள் செயல்படுவதற்கான அனுமதிகள் தொடர்பான உத்தரவில் ஆர்எஸ்எஸ் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

"கர்நாடக அரசு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு தடை விதிக்கவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சங்கங்கள் அனுமதி பெறுவது தொடர்பான உத்தரவில் ஆர்எஸ்எஸ் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை" என்று முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"அந்த உத்தரவில் எந்தவொரு சங்கம் அல்லது அமைப்பு என்றுதான் கூறப்பட்டுள்ளது. பாஜக அரசு பிறப்பித்த உத்தரவையே நாங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். 2013-ல் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்தபோது, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சங்கங்கள் நடவடிக்கைகள் நடத்த தடை விதித்திருந்தார்," என்று கர்நாடக முதல்வர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கர்நாடக அரசு கடந்த வியாழக்கிழமை, அரசுப் பள்ளி மைதானங்களை தனியார் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் 2013-ம் ஆண்டு சுற்றறிக்கையை மீண்டும் வெளியிட்டது. இது பள்ளி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக பள்ளி மைதானங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சுற்றறிக்கை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்நாடக கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, “சிலரின் சித்தாந்த மனநிலை குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் புகார் அளித்துள்ளனர். எனவே, குழந்தைகளின் நலன் கருதி நாங்கள் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டியிருந்தது. குழந்தைகளுக்கு நல்லதல்லாத எதுவும் எங்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படாது,” என்றார்.

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவும், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக சிவில் சர்வீஸ் (நடத்தை) விதிகள், 2021-ன் விதி 5(1)-ஐ சுட்டிக்காட்டி, அரசு ஊழியர்கள் எந்த அரசியல் கட்சிகளிலும் உறுப்பினராக இருக்கவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவோ கூடாது என்றுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் அரசு அதிகாரிகள் இந்த விதியை மீறியுள்ளனர் என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார்." 

"கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கான கர்நாடக சிவில் சர்வீஸ் (நடத்தை) விதிகள், 2021-ன் விதி 5(1)-ன்படி, பின்வரும் விதி ஏற்கனவே அமலில் உள்ளது. எந்தவொரு அரசு ஊழியரும் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது அரசியலில் ஈடுபடும் அமைப்புடனோ உறுப்பினராகவோ அல்லது தொடர்பு கொண்டிருக்கவோ கூடாது. எந்தவொரு அரசியல் இயக்கம் அல்லது நடவடிக்கையிலும் பங்கேற்கவோ, அதன் ஆதரவைக் கோரவோ அல்லது அதற்கு எந்த உதவியும் செய்யவோ கூடாது. தெளிவான வழிகாட்டுதல் இருந்தபோதிலும், சமீப காலமாக அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்பது கவனிக்கப்பட்டுள்ளது," என்று கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.