மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை - கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா திட்டவட்டம்!
மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் தெரிவித்துள்ளார்

கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் கடந்த 3ஆம் தேதி கூடியது. அப்போது பேசிய அவர், மாநிலத்தில் ஊழலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த பிறகு அம்மாநிலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த நிலையில், கர்நாடக மாநில பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். முதல்வராக சித்தராமையா தனது 7ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு முதல்வராக இருந்த சித்தராமையா 2013-2018 காலகட்டத்தில் 6 முறை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வகையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று 3,27,747 கோடி ரூபாய்க்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2,50,933 கோடி வருவாய் செலவிற்கும், 54,374 கோடி ரூபாய் மூலதனச் செலவிற்கும், 22,441 கோடி கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில பட்ஜெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களுக்கு 20% மற்றும் பீர் மீதான உற்பத்தி வரி 10% உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியும் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கை முதன்மையாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மனு தள்ளுபடி: அடுத்து என்ன?
“மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியை விரைவில் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்துக்கான அனுமதி பரிந்துரை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்து அனுப்பப்பட்டுள்ளது. அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை முதன்மையாக செயல்படுத்தப்படும். மேகதாது அணைக்கான சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.” என்று பட்ஜெட் உரையின்போது சித்தராமையா அறிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரிய அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சித்தராமையா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி முறியடிக்கப்படும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை விவகாரத்தில் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.