ராகுல் காந்தி மனு தள்ளுபடி: அடுத்து என்ன?
குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
ராகுல் காந்திக்கு மற்றொரு பின்னடைவாக, மோடி குடும்பப்பெயர் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரிய அவரது மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “அது எப்படி மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை தங்கள் பின்னால் வைத்திருக்கின்றனர்” என விமர்சித்தார். லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருந்தார். தனது பேச்சின் மூலம் பிரதமர் மோடியையும் அவர் மறைமுகமாக சாடியிருந்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதற்கு அடுத்த நாளான மார்ச் 24ஆம் தேதி ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதனைத்தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இந்த நிலையில், ராகுல் காந்திக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று குஜராத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு சட்டப்படி நியாயமானதே எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் வேட்பாளர்: நிதிஷ்குமாரின் கனவை கலைக்கும் லாலு பிரசாத்!
குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், அரசியலமைப்பின் 136 ஆவது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தை ராகுல் காந்தி அணுகுவதற்கான வாய்ப்பு அவருக்கு உள்ளது. எனவே, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற வழக்குகளில் ராகுலுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன என சுட்டிக்காட்டும் மூத்த வழக்கறிஞர்கள், தற்போது அவருக்கு உள்ள ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ராகுல் காந்தி வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு அரசியல் சட்டத்தின் 136வது பிரிவு ராகு காந்திக்கு வழிவகுக்கிறது. சட்டப்பிரிவு 136இன் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் மீதும் மேல்முறையீட்டு அதிகார வரம்பை உச்ச நீதிமன்றம் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது விருப்பப்படி, இந்தியாவில் எந்தவொரு நீதிமன்றத்திலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, அரசியலமைப்பின் 136 ஆவது பிரிவின் கீழ் மேல்முறையீடு செய்ய சிறப்பு அனுமதி வழங்க முடியும்.
இருப்பினும், மேல்முறையீடு நீதிமன்றங்களில் இருக்கும் போதோ அல்லது தண்டனையை இடைநிறுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கும்போதோ அந்த சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றத்தின் குறுக்கீடு சாத்தியமில்லை.