பிரதமர் வேட்பாளர்: நிதிஷ்குமாரின் கனவை கலைக்கும் லாலு பிரசாத்!
எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தனது சாய்ஸ் ராகுல் காந்திதான் என லாலு பிரசாத் யாதவ் ஹிண்ட் கொடுத்துள்ளார்
பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஈடுபட்டிருந்தார். தற்போது அந்த முயற்சியில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பேரில், பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை நிதிஷ்குமார் ஒருங்கிணைக்க முக்கிய காரணமே பிரதமர் பதவி மீதான அவரது கனவுதான் என்கிறார்கள். மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் இருப்பார் என இதற்கு முன்னரும் பேசப்பட்டது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தனது சாய்ஸ் ராகுல் காந்திதான் என லாலு பிரசாத் யாதவ் ஹிண்ட் கொடுத்துள்ளார்.
வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக டெல்லி செல்லும் முன், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், “நாட்டின் அடுத்த பிரதமர் மனைவி இல்லாமல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கக் கூடாது; மனைவி இல்லாமல் பிரதமரின் இல்லத்தில் தங்குவது தவறு.” என்றார்.
ராஜஸ்தான் தேர்தல்... காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் மவுனம்!
சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுல் காந்திக்கு அறிவுறுத்தினார். அது தொடர்பான, கேள்விக்கு பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், நாட்டின் அடுத்த பிரதமர் மனைவி இல்லாமல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கக் கூடாது என தெரிவித்தார். இதன் மூலம், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என தனது விருப்பத்தை அவர் சூசகமாக சொல்வதாக கூறுகிறார்கள்.
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில், பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுலின் முயற்சிகள் மற்றும் அவரது நாடாளுமன்ற உரைகளை லாலு பிரசாத் யாதவ் பாராட்டியிருந்தார். ராகுல் காந்தி தற்போதுவரை திருமணம் செய்யவில்லை. நிதிஷ்குமாரின் மனைவி 2007ஆம் ஆண்டில் காலமாகி விட்டார். இந்த பின்னணியில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என தனது விருப்பத்தை மறைமுகமாக லாலு பிரசாத் தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.
அண்மைக்காலமாகவே, லாலுவுக்கும் நிதீஷுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக பீகார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலுவுக்கு நெருக்கமான ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதில் இருந்து இருவருக்கும் இடையேயான உரசல் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, பீகாரில் ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த பலர் நிதிஷ்குமார் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், லாலுவுக்கும் நிதீஷுக்கும் இடையேயான உறவு சரியில்லை எனவும் அம்மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்திருந்தார். மேலும், ஐக்கிய ஜனதாதள முன்னெடுப்பில் உருவாகும் எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி இருப்பதை அக்கட்சியினர் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.