தமிழகத்தை பின்பற்றி அரசுக்கு எதிரான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் தொடர்ந்து 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டப்பேரவையில்  சித்தராமையா தமிழகத்தின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டி பேச தொடங்கினார்.

 

அப்போது, தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமிக்கு தந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். அப்போது முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அப்போது கொறடா உத்தரவு கூட இல்லாத நிலையில் சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். இதை நீதிமன்றமும் ஏற்றக்கொண்டது. 

ஒருவர் ராஜினாமா செய்யும் போது முழு மனதுடன் திறந்த புத்தகமாக ராஜினாமா கடிதம் தர வேண்டும். ராஜினாமாவுக்கு முன் குதிரை பேரம் நடந்தது உறுதி எனில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை சபாநாயகர் காப்பாற்ற வேண்டும். பணம் மற்றும் அமைச்சர் பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவதை தடுக்க வேண்டும் என்றார். கர்நாடகாவில் பாஜக தற்போது செய்து வரும் செயல் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி. இந்த வியாதியை கண்டுகொள்ளாவிட்டால் எந்த மாநிலத்திலும் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது என்றும் சுறியுள்ளார்.