நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பளார் விட்ட பெண் காவலர்!
சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தை, மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மக்களவைத் தேர்தல் 2024இல் இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் நடைபெற்ற வாக்கு வாதத்தில், பெண் காவலர் கங்கனாவை அறைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனாவின் கருத்துக்களால் ஆத்திரமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் அவரை அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்த சம்பவம் குறித்து கங்கனா இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை கங்கனா ரனாவாத் டெல்லி சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. முன்னதாக, “"நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில். மண்டி கி சன்சாத்.” என்ற தலைப்பில் செல்பி புகைப்படத்தை கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கனா ரனாவத், காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மொத்தம் 5,37,022 வாக்குகளை கங்கனா ரனாவத் பெற்றுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில், சண்டிகர்-உனா நெடுஞ்சாலையில் உள்ள புங்கா சாஹிப், கிராத்பூர் சாஹிப்பில், தனது காரை விவசாயிகள் சூழ்ந்ததாக கங்கனா குற்றம் சாட்டியிருந்தார். “நான் பஞ்சாபிற்குள் நுழைந்தபோது ஒரு கும்பல் எனது காரைத் தாக்கியது. அவர்கள் விவசாயிகள் என்று கூறுகிறார்கள், விவசாய போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த விவசாயிகள் கூறினர். தனக்கு பாதுகாப்பு இல்லையென்றால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பேன்.” என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
பிரதமராக நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி பதவியேற்பு!
விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தானி இயக்கமாக சித்தரித்ததாக கங்கனா ரணாவத் மீது மும்பை காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மிரட்டல் வந்ததாகக் கூறி கங்கனா ரனாவத் எப்ஐஆர் பதிவு செய்திருந்தார். மறுபுறம், விவசாயிகளின் போராட்டத்தை காலிஸ்தானி இயக்கமாக சித்தரித்து அவர்களை சமூக ஊடகங்களில் 'காலிஸ்தானிகள்' என்று அழைத்ததற்காக மும்பை காவல் நிலையத்தில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.