ராம நவமி அன்று அசைவ உணவு தொடர்பான விவகாரத்தில் மாணவ அமைப்புகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று ஜே.என்.யு பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஜே.என்.யு பல்கலைகழகத்தில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஏபிவிபி மற்றும் இடது சாரி மாணவ அமைப்புகளிடையே மோதல் நடந்தது. ராம நவமி முன்னிட்டு விடுதியில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்று ஏபிவிபி அமைப்பினர் தடை விதித்ததால் இரண்டு தரப்பினருக்கும் இடையே தகராறு எழுந்ததாக சொல்லப்பட்டது. மேலும் காவிரி விடுதியில் நடக்கவிருந்த பூஜையை இடது சாரி அமைப்பு தடுத்ததால் பிரச்சனை வெடித்ததாக கூறப்பட்டது. இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இதுக்குறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தினி ஸ்ரீ பண்டிட், பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஆடையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை உண்ணலாம என்றும் பிடித்த ஆடைகளை அணியலாம் என்றும் தெரிவித்தார். மாணவர்களிடையே நடந்த மோதல் எதிர்பாராவிதமாக நடந்த சம்பவம் என்று குறிப்பிட்ட அவர், கல்வி நிலையம் என்பது சண்டை போடுவதற்கான இடமோ அல்லது அரசியல் செய்வதற்கான களமோ கிடையாது என்றார்.

மேலும் உங்கள் அரசியலுக்கு ஜே.என்.யு ஒருபோதும் உதவாது எனவும் அரசியல் வேண்டுமென்றால் தேர்தலில் போட்டியிடுங்கள் என்றும் ஆதங்கப்பட்டார். பல்கலைக்கழகம் என்பது சரஸ்வதி வாழும் இடம் .. இங்கு நன்றாக படியுங்கள்.. கல்வி ரீதியாக வாதங்கள், சண்டைகள் இடுங்கள்.ஆனால் அரசியல் செய்யாதீர்கள் என்று தெரிவித்தார்.மிக சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கும் ஜே.என்.யுவில் படித்த 95% மாணவர்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்கு படித்து சென்ற பலரும் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என பல்வேறு உயர் பதவியில் இருக்கின்றனர்.

மேலும் ஜே.என்.யு ஒரு சுதந்திரமான இடம். அங்கு உணவு விடுதி மாணவர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை. உணவு விடுதியின் கமிட்டி தான் எந்த உணவு சமைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது. இந்த கமிட்டியில் மாணவர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகத்தில் இருந்த 16 விடுதிகளில் எந்த பிரச்சனையும் எழவில்லை. மேலும் அந்த விடுதிகளில் எல்லாம் அசைவ உணவுகளும் இருந்துள்ளது. ஆனால் இந்த ஒரு விடுதியில் மட்டும் பிரச்சனை வெடிக்க காரணம் என்ன..? எனும் வகையில் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணையின் முடிவில் தான் உண்மையில் நடந்தவற்றை உறுதியாக கூற முடியும் என்றார். 

மேலும் ராம நவமி அன்று சைவ உணவு மட்டும் வழங்கியது தொடர்பாக விடுதியின் செயலர் மற்றும் காப்பாளரிடம் கேட்ட போது, மாணவர்களே அதை முடிவு செய்ததாக கூறியுள்ளாத ஜே.என்.யு துணை வேந்தர் தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த மோதலை சகித்துக்கொள்ள முடியாது என்றும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் கூறினார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஒரு மாணவ அமைப்பு தான் முதலில் காவல்நிலையம் சென்று புகார் கொடுத்ததாகவும் அதன் பின் மற்றொரு மாணவ அமைப்பு போலீசாரிடம் சென்றதாகவும் குறிப்பிட்ட அவர் இதற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்றார்.