ஜார்க்கண்டில் தற்போதைய முதல்வரான பாஜகவின் ரகுபர் தாஸ் ஜம்சேத்புர் கிழக்கு தொகுதியில் பின்னடைவில் இருக்கிறார். அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட சிராயு ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். 1995 முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ரகுபர்தாஸ் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிராயு ராய், பாஜக அமைச்சராக இருந்தவர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக களம் இறங்கினார். 2014 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ரகுபர் தாஸ் முதல்வராக பதவி ஏற்றார். ஜார்க்கண்டில் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவியை முதல்வர் ரகுபர் தாஸ் நிறைவு செய்துள்ளார்.

81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இடையில் பாஜக 33 இடங்களில் முன்னிலை பெற்று இழுபறி நீடித்தது. பின் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது. தற்போது வரையில் காங்கிரஸ் கூட்டணி 44  இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 26 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைப்பதற்கு தேவையான 41 தொகுதிகளை கடந்து அக்கூட்டணி முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆளும் பாஜக 26 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 இடங்களிலும் பிறகட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி வாய்ப்பில் இருக்கின்றன.