மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாஜக ஆட்சியை இழக்கிறது. இதனையடுத்து, கருத்து கணிப்பில் கூறியது போல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது.

ஜார்க்கண்ட்டில் 81 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 65 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், அவை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அக்கட்சிக்கு பின்னடைவு சந்திக்கும் என கூறப்பட்டது. 

இந்நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கையின் போது இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தன. தொடக்கத்தில் முன்னிலை வகித்த பாஜக பிறகு பின்னடைவை சந்தித்தது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையான நிலையில் காங்கிரஸ் கூட்டணி 40-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக 28 இடங்களிலும், ஜேவிஎம் 4 இடங்களிலும், ஏஜேஎஸ்யூ 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதனையடுத்து, மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாஜக ஆட்சியை இழக்கிறது. ஜார்கண்டில் தீவிர பிரச்சாரம் செய்த போதும் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் மாயஜாலம் எடுபடவில்லை என்பதே இந்த முடிவு உணர்த்துகிறது. அடுத்தடுத்து மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்து வருவதால் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால், ஜார்கண்ட் முக்தி மோட்சா தலைவராக இருக்கும் ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜக 28 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருவதால் தனித்து போட்டியிட்ட ஏஜெஎஸ்யு, ஜெவிஎம் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்து, தொங்கு சட்டப்பேரவை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.