ஜெயலலிதா சேலையை இழுத்த கட்சிதான் திமுக: மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!
ஜெயலலிதா சேலையை இழுத்த கட்சிதான் திமுக என மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பேசிய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்
மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன் தினம் முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசினார். அப்போது பேசிய அவர், “2013 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் உடையக்கூடிய நிலைமையில் இருக்கிறது என கூறிய ஆய்வு நிறுவனங்கள் தற்பொழுது இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என அறிக்கைகள் கொடுத்து வருகின்றன. ஜந்தன் யோஜனா, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.” என்றார்.
முந்தைய ஆட்சியில் மின்சாரம், குடிநீர் தரப்படும், விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலைகள் போடப்படும் என சொல்லி வந்தார்கள் ஆனால் இப்போது அனைத்தும் கிடைத்து விட்டது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
தக்காளி விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தக்காளி விளையும் பகுதிகளில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் நாஃபெட் போன்ற கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிப்பதும் நடைபெற்று வருகிறது. இன்றைய நிலவரப்படி, ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் 8,84,612 கிலோ தக்காளியை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு விநியோகித்துள்ளது. இது வரும் நாட்களில் தொடர்வதுடன் அதிகரிக்கப்படும். அதேசமயம் தக்காளி விலை குறயவும் ஆரம்பித்துள்ளது.” என்றார்.
“மக்களவையில் செங்கோலை அதன் சரியான இடத்திற்கு பிரதமர் மோடி மீட்டெடுத்தபோது, அது ஒரு பிரச்சினையாக மாறியது, இது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். பல தசாப்தங்களாக செங்கோல் புறக்கணிக்கப்பட்டது. காசி தமிழ் சங்கம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் எவ்வளவு ஆழமான தொடர்பு உள்ளது என்பதை காட்டியது. ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மேற்கோள் காட்டப்பட்டத்தை நீங்கள் முதன்முதலில் கேட்டீர்கள். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பலமுறை தமிழை பயன்படுத்தியுள்ளார். நாங்கள் திராவிடர்கள் அல்ல, தமிழர்கள் என சிலப்பதிகாரம் சொல்கிறது. சிலப்பதிகாரம் என்ன சொன்னதோ அந்த வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை நடத்துகிறார்.” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாக சாடி பேசினார். “நாங்கள் திராவிடர்கள் அல்ல, தமிழர்கள் என சிலப்பதிகாரம் சொல்கிறது. ஹிந்தி, சமஸ்கிருதத்தை நாங்கள் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற திணிப்பு தமிழ்நாட்டில் இருந்தது. தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஹிந்தியை வளர்க்க கூடாது என்ற ஆணவத்துடன் தனிநபர்கள் ஹிந்தி, சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள விடாமல் எங்களை தடுத்தீர்கள்.” என குற்றம் சாட்டினார்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: 4 மணிக்கு பேசும் பிரதமர் மோடி!
மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுவதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதில் அரசியல் செய்யக் கூடாது என கூறிய நிர்மலா சீதாராமன், “1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அன்றைய தினம் சட்டப்பேரவையிலேயே ஜெயலலிதாவினுடைய சேலை பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக அவர் இருந்தார். அதற்கு பிறகு முதலமைச்சராகாமல் அவைக்கு நான் வரமாட்டேன் என அவர் சபதமிட்டார். 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக அந்த அவைக்கு வந்தார். ஆனால் இவர்கள் திரௌபதி குறித்து பேசுகிறார்கள். ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா? தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா அவர்களுடைய சேலையை பிடித்து இழுத்த கட்சிதான் திமுக.” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
“மத்திய அரசுதான் முழுக்க முழுக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கிறோம். வாங்கும் கடனை நாங்கள் தான் திரும்ப அடைக்கபோகிறோம். இதனால் தமிழ்நாடு அரசுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் கடன் வாங்கி கட்டுகிறீர்களே வெட்கமாக இல்லையா என திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். தற்பொழுது நாங்கள் மருத்துவமனையை கட்டித் தருவோம் என சொன்னால் எப்பொழுது கட்டுவீர்கள் என கேட்கிறார்கள். என்ன நியாயம்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக 900 படுக்கைகள் உள்ளது. மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 750 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 150 படுக்கை வசதிகள் உள்ளது.” என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியை காட்டுமிராண்டித்தனம் என முந்தைய அரசு கூறி தடை விதித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரும் முதலைகண்ணீர் வடிக்க வேண்டாம் எனவும் நிர்மலா சீதாராமன் சாடினார்.
முன்னதாக, நிர்மலா சீதாராமன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்தான விவாதத்தில் பேசித் தொடங்கியதுமே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.