இந்தியாவில் அதிவேக ரயில் பாதைக்கான சோதனை ஓட்டத்திற்காக ஜப்பான் இரண்டு ஷின்கான்சென் ரயில்களை இலவசமாக வழங்குகிறது. இந்த சோதனை ஓட்டம் இந்திய சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு ரயில்களை மேம்படுத்த உதவும். புல்லட் ரயில் திட்டத்திற்கான நிதியை ஜப்பான் குறைந்த வட்டியில் கடனாக வழங்குகிறது.

Japan gifts 2 Shinkansen trains to India: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களின் பாதி வேகத்தைக் கொண்ட ரயில்களை புல்லட் ரயில் தடத்தில் இயக்குவதற்கு இந்தியா தயாராகி வருவதாகவும், இந்தியாவுக்கு அதுபோன்ற இரண்டு ரயில்களை இலவசமாக ஜப்பான் கொடுக்க இருப்பதாகவும் ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் Shinkansen trains:
இந்தியா மும்பை - அகமதாபாத் இடையே அதிவேக ரயில்களை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான காரிடார் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட புல்லட் ரயில்களை இயக்குவதற்கு முன்பு ஜப்பான் அதன் புகழ்பெற்ற ஷின்கான்சென் (Shinkansen trains) ரயில்களின் இரண்டு தொகுப்புகளை இலவசமாக இந்தியாவுக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. 

Shinkansen trains: இந்தியாவின் சுற்றுச் சூழல் அறிய சோதனை ஓட்டம்:
ஜப்பான் டைம்ஸ் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''தற்போது கட்டுமானத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் சோதனை செய்வதற்கு என்று இந்த திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. E5 மற்றும் E3 தொடரில் இருந்து தலா ஒன்று என இரண்டு ரயில் பெட்டிகள் ஆய்வு உபகரணங்களுடன் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வழங்கப்படும். சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த ரயில்கள் மூலம் இந்தியாவின் சுற்றுச் சூழல், அதிக வெப்பம், தூசுக் காற்று குறிப்பாக ஓட்ட இயக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்! டிஃபன் சாப்பிடும் நேரத்தில் சென்னை - திருச்சி போகலாம்

இந்திய புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதி கொடுக்கும் ஜப்பான்:
குறிப்பாக, புல்லட் ரயில் திட்டத்திற்கான நிதி பெரும்பாலும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து குறைந்த வட்டி யென் கடன்கள் மூலம் பெறப்படுகிறது. இது திட்டத்தின் ஒட்டுமொத்த செலவுகளில் சுமார் 80 சதவீதத்தை ஈடுகட்டும் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், செலவுகள் அதிகரித்து வருவதால், இருநாட்டு அரசுகளும் புதிய கடன் கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக ஜப்பானுக்கு செல்லும்போது இதுதொடர்பாக முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில்! கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் 24 ஆற்றுப் பாலங்கள்: 
அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் பாதையை அமைக்கும் பணியை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் 2021 நவம்பரில் துவங்கப்பட்டு, நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இந்த வழித்தடத்தின் ஒரு பகுதியாக, வல்சாத் மாவட்டத்தில் உள்ள பர், ஔரங்கா மற்றும் நவ்சாரியில் உள்ள பூர்ணா, மிந்தோலா, அம்பிகா மற்றும் வெங்கனியா ஆகிய ஆறு ஆறுகளின் மீது பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. MAHSR வழித்தடத்தில் மொத்தம் 24 ஆற்றுப் பாலங்கள் உள்ளன. அவற்றில் 20 குஜராத்திலும் மீதமுள்ளவை மகாராஷ்டிராவிலும் உள்ளன.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்:
இதுகுறித்து கடந்தாண்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ''புல்லட் ரயில் திட்டத்தை பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இந்திய ரயில்வேயின் இந்த முயற்சியால் முதல் வழித்தடத்தில், மும்பை, தானே, வாபி, பரோடா, சூரத், ஆனந்த் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். எனவே நீங்கள் சூரத்தில் காலை உணவை சாப்பிட்டு விட்டு, மும்பையில் வேலையை முடித்துவிட்டு இரவில் உங்கள் குடும்பத்துடன் திரும்பி வரலாம்" என்று தெரிவித்து இருந்தார்.