ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 250க்கு மேற்பட்டோரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதை அறிந்ததும், சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினாவில் நடக்கும் இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று காலை புதுச்சேரி மாநிலம் இந்திரா காந்தி சிலை, ஏஎப்டி மைதானத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இரவு முதல், தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கொட்டும் பனியையும் பார்க்காமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது மற்றும் பீட்டா அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து, புதுவை போராளி இயக்கம் சார்பில் பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும். பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 7 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
