புதுடெல்லி, நவ. 16.-
ஜன் தன் திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் பணம் குறித்து மத்திய அரசு கண்காணித்து வருவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி கந்த தாஸ் கூறியுள்ளார்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜன்தன் திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. தற்போது உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களது வங்கி கணக்குகளில் தங்களது பணத்தை செலுத்தி அவர்கள் மூலம் தங்களது பணத்தை மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படுவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
வங்கிக் கணக்குகள் கண்காணிப்பு
அதே நேரம் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஜன்தன் திட்டத்தில் அதிக பட்சமாக ரூ.50,000 வரை பணம் போடலாம் என்ற நிலையில் அந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பல கணக்குகளில் கடந்த சில நாட்களில் ரூ.49,000 ஆயிரம் பணம் போடப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது.
ஜன்தன் வங்கி கணக்காளர்கள் தங்கள் வங்கி கணக்கில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்றவர்களின் கருப்புப் பணத்தை தங்கள் வங்கி கணக்கில் சேர்க்க அனுமதிக்க கூடாது. நியாயமான முறையில் ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் செய்பவர்கள் எந்த அசவுகரியங்களுக்கும் ஆளாக மாட்டார்கள்.
சில்லறை தட்டுப்பாடு நீக்கப்படும்
வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை (ரூ.100, ரூ.50, ரூ.20 போன்றவை) வங்கிகளில் உடனுக்குடன் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு விரைவில் சில்லறை கிடைக்கும்.
மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு தேவையான பணம் உள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் தபால் நிலையங்களில் கூடுதல் பணத்தை கை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
வங்கிகள் வேலை நிறுத்தம், உப்புக்குத் தட்டுப்பாடு என்பன போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்கள் அச்சப்படவோ, பீதி அடையவோ தேவை இல்லை.
பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவுக்கு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். பொறுமையாக புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள் மீது நடவடிக்கை
மருத்துவமனைகள், மருந்தகங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் சிரமங்களை குறைப்பதே அரசின் முதன்மையான நோக்கம். மாநில அரசுகளுடனும் தலைமைச் செயலாளர்களுடனும் மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அடுத்த சில நாட்களில் நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சக்தி கந்த தாஸ் கூறினார்.
