Hemant Kumar Lohia: ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா கொலை; வீட்டுப் பணியாளர் கைது!!
ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை போலீஸ் டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியாவைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் கொலையாளி செவ்வாய்க்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
லோஹியாவின் வீட்டில் பணிபுரிந்த 23 வயது வீட்டு வேலையாள் யாசிர் அகமது கைது செய்யப்பட்டார். உயர் போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏடிஜிபி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
கழுத்து அறுபட்ட நிலையில், உடலில் பல்வேறு காயங்களுடன் ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை போலீஸ் டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஜம்முவுக்கு வெளிப்புறத்தில் இருக்கும் அவரது நண்பரின் வீட்டில் ஹேமந்த் குமார் லோஹியா உடல் கண்டெடுக்கப்பட்டது. நண்பரின் வீட்டில் தனது குடும்பத்தினருடன் ஹேமந்த் குமார் லோஹியா தங்கி வந்தார். இவரது வீடு தற்போது புனரமைக்கப்பட்டு வருவதால், தற்காலிகமாக நண்பர் வீட்டில் தங்கி வந்தார்.
இதுவரை இந்தக் கொலையில் எந்த தீவிரவாத அமைப்பும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறைத்துறை டிஜிபியாக ஹேமந்த் குமார் லோஹியா நியமிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு வயது 57.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம்.. சிறைத்துறை டி.ஜி.பி. கொடூர படுகொலை..!
கடந்த ஆறு மாதங்களுக்கும் முன்புதான் தனது வீட்டில் வேலை செய்வதற்காக யாசிர் அகமது என்பவரை ஹேமந்த் குமார் லோஹியா பணியில் அமைத்தியுள்ளார். இவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த யாசிர் அகமதுவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். யாசிர் அகமதுவை கைது செய்வதற்கு ஏதுவாக அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு இருந்தனர்.
ஜம்முவின் ஏடிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ''கடுமையான மன அழுத்தத்தினால் யாசிர் அகமது பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலை நடக்கும்போது போலீஸ் டிஜிபி ஹேமந்த் குமார், கால் வீக்கம் காரணமாக பாதத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டுள்ளார். அப்போது கெட்சப் பாட்டிலால் அவரது கழுத்தை யாசிர் அகமது அறுத்துள்ளார். மேலும், அவரது உடலுக்கு தீ வைத்துள்ளார். அறையில் இருந்து புகை வரவே பாதுகாவலர்கள் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். உள்புறமாக கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. சிசிடிவியில் பார்க்கும்போது குற்றவாளி தப்பி ஓடுவது பதிவாகி உள்ளது'' என்று தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்து உடைந்த கெட்சப் பாட்டில், டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜவ்ரியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க இருப்பதால் அங்கு மொபைல் டேட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது.