Asianet News TamilAsianet News Tamil

ஜம்மு - காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்

Jammu Kashmir encounter  two terrorists killed search operation continues smp
Author
First Published Sep 13, 2023, 7:49 PM IST

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நர்ஹல் பகுதியில் பாதுகாப்புப்படையினர் திடீரென தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம், ராணுவ கர்னல் உள்பட 3 வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். மேலும், ராணுவத்தின் நாய் பிரிவில் பணிபுரிந்து வந்த பென் நாய் ஒன்றும் வீர மரணமடைந்துள்ளது. இவர்கள் தவிர, ராணுவ வீரர்கள் இரண்டு பேர், சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர்.

நர்ஹல் கிராமத்தில் தேடுதல் நடவடிக்கையின் போது என்கவுன்டர் தொடங்கியதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஜம்மு மண்டலம்) முகேஷ் சிங் தெரிவித்தார். இப்பகுதியில், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த இரண்டு மாவட்டங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கருக்கு பிரதமர் மோடி நாளை பயணம்!

கடந்த 4ஆம் தேதி  ரியாசி மாவட்டத்தின் சசானா பகுதிக்கு அருகிலுள்ள கலி சோஹாப் கிராமத்தில் ஒரு என்கவுன்டர் நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.

ரஜோரி மற்றும் பூஞ்ச் எல்லைப் பகுதிகளில் இந்த ஆண்டு பல என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் சுமார் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் 10 பேர் வீர மரணமடைந்துள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இந்தப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios