காஷ்மீரில் மினிபேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காஷ்மீரின் பனிலால் பகுதியிலிருந்து ரம்பனுக்கு நேற்று பயணிகளுடன் மினிபேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரி்ன் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த பேருந்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

மீட்புப் பணிகளில் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று காலை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.