காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் ஆசார் உள்ளிட்ட 15 தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்திய ராணுவத்திற்கு எதிராக அதிரடியாக தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதனையடுத்து, பல்வேறு இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கல்லூரி மாணவர்கள் உடனடியாக தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு உடனே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர், பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.