மாநில அரசின் அவசர சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளியுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜல்லிகட்டு நிகழ்ச்சியை நடத்திட தமிழக அரசு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் பிரதமர் ஏற்கெனவே உறுதியளித்திருந்த நிலையில், முதலமைச்சர் டெல்லியில் தங்கி அவசர சட்ட வரைவை தயார் செய்தார்.

காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கான சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு மாநில அரசின் சார்பில் அனுப்பப்பட்டது. மத்திய அரசு வழக்‍கறிஞர் முகுல் ரோத்கியின் ஆலோசனையைப் பெற்று, ஜல்லிக்‍கட்டு விளையாட்டை நடத்துவதற்கான தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்‍கு, மத்திய அரசின் சட்டம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள்​ ஒப்புதலுக்கு அளித்தது. 

இந்த சட்டவரைவு மத்திய சட்ட அமைச்சகத்தால் ஒப்புகொள்ளப்பட்டு நேற்று மாலை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் உள்துறை அமைச்சகமும் நேற்றிரவு ஒப்புதல் அளித்தது. இது ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று மாநில ஆளுநருக்கு அனுப்பப்படும் . அப்படி அனுப்பப்படும் ஒப்புதலை உடனடியாக சட்டமாக வெளியிட ஏதுவாக மஹாராஷ்டிராவிலிருந்து கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கும் வந்துவிட்டார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் நேற்று கொல்கொத்தாவிலிருந்து டெல்லி திரும்பி விட்டார். ஆனாலும் இன்னும் சட்டவரைவு குறித்து அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழகத்தில் போராட்டம் வீரியமாக சென்று கொண்டிருக்கிறது.

பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. மதுரை நாகர்கோவில் ரயில் இரண்டு நாளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மெரினாவிலும் போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் சாலையை ஆக்கிரமிப்பது போக்குவரத்தை முடக்குவது போன்ற செயல்களில் இறங்க ஆரம்பித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் விரைவாக வருவதை ஒட்டி நாளையே ஜல்லிக்கட்டை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. குடியரசு தினமும் நெருங்குவதால் கடற்கரை சாலை பிரச்சனைஅயி முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு இன்று மாலைக்குள் முடிவு எடுத்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளிதால் தான் எல்லாவற்றையும் சரி செய்ய முடியும் .ஆகவே உடனடியாக குடியரசு தலைவர் கையெழுத்திட சொல்லி அதிமுக எம்பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.