உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிகட்டுக்கான அவசர சட்டத்தை எதிர்த்து இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள விலங்குகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் 3 பேர் அரசு விதியை மீறியதால் அவர்கள் பதவிக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது.
ஜல்லிகட்டை தடை செய்ய கோரி பீட்டா அமைப்பின் சார்பில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் ஜல்லிகட்டை தடை செய்தது.
மத்திய அரசின் விலங்கு நல வாரியம் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசும் ஜல்லிகட்டுக்கு தடை விதித்தது.

2009ஆம் ஆண்டு தமிழக அரசு மாநில அளவில் ஜல்லிகட்டுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றியது.ஆனால அதற்கும் மேற்கண்ட அமைப்புகள் தடை வாங்கின.
இதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
இதற்கிடையே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா? என்று எதிர்பார்ப்பில் கடைசி நிமிடம் வரை ஜல்லிக்கட்டு நடக்காத காரணத்தினால் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

சமூக வலைதளங்களின் மூலமாக ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள் லட்சகணக்கில் பெருகி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
இதன் விளைவாக மாநில அரசு மத்திய அரசுடன் பேசி அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.
இந்த சட்டம் மத்திய சுற்று சூழல் சட்டம் உள்துறை அமைச்சகங்கள் மூலமாக முறைப்படி கொண்டு வந்ததால் சட்டம் நிரந்தர சட்டமானது.
இந்த சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அட்டவணை ஒன்பதில் சேரப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தடை வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை எதிர்த்து சியோப்பா, கியூப்பா என்ற இரண்டு அமைப்புகளும் இடைக்கால மனுவை தாக்கல் செய்தனர்.

இது தவிர மத்திய அரசு 2016ஆம் ஆண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்த அறிவிக்கையை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றதையடுத்து விலங்கு நல வாரிய அமைப்பின் மூண்டு உறுப்பினர்களும் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளனர்.
சியோப்பா, கியூப்பா இரண்டும் தனியார் அமைப்புகள். மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர உரிமை உள்ளது.
ஆனால் மத்திய அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை மத்திய அரசின் அங்கமான விலங்க நல வாரியம் எதிர்க்க முடியாது.

இதனால் அந்த அமைப்பில் உள்ள மூன்று உறுப்பினர்கள் தனி தனியாக மூன்று வழக்குகளை போட்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய அரசின் அமைப்பில் இருப்பவர்களே மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்வது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல.
யாரேனும் இவர்கள் செயல்பாடு குறித்து வழக்கு தொடரும் பட்சத்தில் இந்த மூவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது.
