கச்சத்தீவு பிரச்சினை கிளப்பிய பாஜக பூஜ்ஜியம் வாங்கப்போவது உறுதி: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
பிரதமரும் அவரது சகாக்களும், தேர்தலில் பூஜ்ஜியம் வாங்கப்போவது தெரிந்துவிட்ட விரக்தியில் உள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக கச்சத்தீவு பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவை தாரா வார்க்க முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு சதி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியும் கச்சத்தீவை காங்கிரஸ் கட்சிதான் இலங்கைக்கு அநாவசியமாக தாரைவார்த்துவிட்டது என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையில் விமர்சனத்துக்குப் பதில் அளித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:
1. பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் ஒரு ஆர்.டி.ஐ. மனுவைத் தாக்கல் செய்கிறார். பொதுப் பிரச்சனைகள் குறித்த லட்சக்கணக்கான ஆர்.டி.ஐ. மனுக்கள் புறக்கணிக்கப்படும் சூழலில், இவருடைய மனுவுக்கு மட்டும் முன்னுமை கொடுத்து விரைவாக பதிலளிக்கப்படுகிறது.
2. பாஜகவின் தமிழகத் தலைவர் தனது ஆர்.டி.ஐ. மனுவுக்குக் கிடைத்த பதிலை தனக்கு வசதியாக சில ஊடகங்களிடம் கொடுத்து வெளியிடச் செய்கிறார். பிரதமர் உடனடியாக இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்குகிறார். மேட்ச் பிக்சிங்தான் செய்கிறார்கள்!
3. வரலாறு திரிக்கப்படுகிறது. முடிவுகள் எடுக்கப்பட்ட சூழல்களை புறக்கணித்து, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறு பரபரப்பப் படுகிறது. 1974ல், கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக மாறிய அதே ஆண்டில், சிறிமா பண்டாரநாயக்கா -இந்திரா காந்தி ஒப்பந்தம், இலங்கையிலிருந்து 600,000 தமிழ் மக்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப அனுமதித்தது. ஒரே ஒரு நடவடிக்கை மூலம் நாடற்றவர்களாக இருந்த ஆறு லட்சம் தமிழ் மக்களின் மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதி செய்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.
4. 2015ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் வங்கதேசத்துடனான நில எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில் 17,161 ஏக்கர் இந்திய நிலப்பரப்பு வங்கதேசத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் 7,110 ஏக்கர் மட்டுமே இந்தியா பெற்றது. இதனால் இந்தியாவின் நிலப்பரப்பு 10,051 ஏக்கர் சுருங்கிவிட்டது. பிரதமர் மீது சிறுபிள்ளைத்தனமாக குற்றச்சாட்டுகளை கூறாமல், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான மசோதாவை ஆதரித்தது.
5. கடந்த சில ஆண்டுகளில் சீனப்படை மிகப்பெரிய அளவில் இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்திருக்கிறது. தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு உண்மையான அச்சுறுத்தல் இதுதான். சீன ஆக்கிரமிப்பை வெளியேற்றிக் காட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர், 2020 ஜூன் 19ஆம் தேதி, சீன ராணுவ வீரர் ஒருவர் கூட இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என அறிவித்துவிட்டார். ஆனால், பாஜகவைச் சேர்ந்த எம்பிக்களே சீன ஊடுருவலை உறுதி செய்திருக்கிறார்கள்.
தேசப் பாதுகாப்பு குறித்த எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாத பிரதமரும் அவரது சகாக்களும், தேர்தலில் பூஜ்ஜியம் வாங்கப்போவது தெரிந்துவிட்ட விரக்தியில் உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் இந்த விளையாட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 19ஆம் தேதி தகுந்த பதிலை அளிப்பார்கள்!
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மனைவியை பேய், பிசாசுன்னு சொன்னா தப்பு இல்லையாம்! பாட்னா உயர் நீதிமன்றம் கொடுத்த விளக்கம்!