ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு வெளியில் அம்மாநில அமைச்சர் ஒருவர், காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.,வை ஜெய் ஸ்ரீ ராம் எனச் சொல்லச் சொல்லி என்று வம்பிழித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் ஜார்கண்ட் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.சிங் என்கிற அந்த ஜார்கண்ட் அமைச்சர், இர்ஃபான் அன்சாரி என்கிற எம்.எல்.ஏ-விடம், ’இர்ஃபான் பாய், ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லுங்க. உங்கள் முன்னோர் ராமர்தான். பாபர் அல்ல’’ என்று கூறுகிறார். அப்படி சொல்லும் போது சிங், இர்ஃபான் அன்சாரியை வலுக்கட்டாயமாக இழுப்பது தெரிகிறது. 

இதற்கு இர்ஃபான் எம்.எல்.ஏ, “ராமரின் பெயரை பயன்படுத்தி என்னை அச்சம் கொள்ளச் செய்கிறீர்கள். ராமரின் பெயரைக் கெடுப்பதே நீங்கள்தான். நமக்கு வேண்டியது எல்லாம் வேலைவாய்ப்பு, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைகள் வசதிகள்தான். இதுவல்ல” என்கிறார்.

உடனே பதிலடியாக, “உங்களை அச்சப்படுத்த அப்படி சொல்லவில்லை. உங்களின் முன்னோர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொன்னதை மறக்க வேண்டாம். தய்மூர், பாபர், கஜினி உள்ளிட்டவர்கள் உங்களின் முன்னோர்கள் அல்ல. உங்கள் முன்னோர்கள் ராமரின் பக்தர்கள்” எனக் கூறினார். ஜார்கண்டில் அமைந்திருக்கும் பாஜக அரசின், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.சிங். அவரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அம்மாநில பாஜக கருத்து கூறியுள்ளது. 

கடந்த மாதம் ஜார்கண்டில் ஒரு வலதுசாரி குழு, முஸ்லிம் இளைஞர் ஒருவரை ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடச் சொல்லி தாக்கியது. இந்த சம்பவத்தில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது தாக்குதலில் ஈடுபட்டவர்களை அவர் கண்டித்தார். 

இது குறித்து, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழதிய கடிதத்தில், “டியர் பிரைம் மினிஸ்டர்… முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற சிறுபான்மையினர்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியட்ட தகவல்படி, 2016 ஆம் ஆண்டு மட்டும் இதைப் போன்ற 840 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவை குறித்து சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவங்கள் குறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளி வர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்கிற கோஷம் தான் பல வன்முறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்து வருகிறது. மதத்தின் பெயரால் இத்தனை வன்முறைகள் நடப்பது வருத்தமளிக்கிறது. ராம் என்கிற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அப்படியிருக்க, அந்த பெயர் வன்முறைக்காக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.