Asianet News TamilAsianet News Tamil

ஆந்திராவில் ஜெகனை முந்துகிறாரா சந்திரபாபு நாயுடு; தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன கூறுகிறது?

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் வரும் 2024ஆம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவார் என்று இண்டியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Jagan lose ground to Chandrababu Naidu in 2024 Lok Sabha election: India TV-CNX Poll
Author
First Published Oct 6, 2023, 12:49 PM IST

ஆந்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்யும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே 2024 மக்களவைத்  தேர்தலை முன்னிட்டு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையேதான் களம் கடுமையானதாக இருக்கப் போகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சீனில் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏற்கனவே இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை மறைமுகமாக துவக்கியுள்ளன. பேரணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் நடக்கவிருப்பதால், இந்த மாநிலம் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. 

ஆந்திராவைப் பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி செய்து வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கிய ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஆட்சியில் இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவும் இந்த மாநிலத்தை மூன்று முறை முதல்வராக ஆட்சி செய்து இருக்கிறார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஆட்சியை இழந்தார் சந்திரபாபு நாயுடு.  

பாஜகவை கழட்டி விட்ட பவன் கல்யாண்! தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு! காலியான NDA கூடாரம்!

தற்போது திறன் மேம்பாட்டு திட்ட ஊழலில் கைதாகி இருக்கும் சந்திரபாபு நாயுடு சிறையில் இருக்கிறார். இவரது நீதிமன்றக் காவலை அக்.19-ம் தேதி வரை நீட்டித்து லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திறன் மேம்பாட்டு கழகத்தில் சுமார் 317 கோடி ரூபாய் அளவிற்கு சந்திரபாபு நாயுடு முறைகேடு செய்து இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திரப்பிரதேச சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து சிஎன்எக்ஸ் உடன் இணைந்து இண்டியா டிவி கருத்துக்கணிப்பு மேற்கொண்டது. இதில், ஆந்திராவில் மொத்தமிருக்கும் 25 மக்களவை தொகுதிகளில் 46 சதவீத வாக்குகளை ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசும், 42 சதவீத வாக்குகளை சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பாஜக 2 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 2 சதவீத வாக்குகளையும் பெறும் என்று தெரிய வந்துள்ளது.

ரோஜாவின் ஆபாசப் படத்தை முழுமையாக வெளியிடுவோம்: தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி மிரட்டல்

ஆனால், மொத்தமிருக்கும் 25 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டி 15 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. வரும் தேர்தலில் இவற்றில் ஏழு தொகுதிகளை சந்திரபாபுவின் தெலுங்குதேசம் கட்சியிடம் ஜெகன் மோகன் ரெட்டி இழப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெரியளவில் பிரச்சாரத்தை துவக்கி இருக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. இவற்றை நாம் கணிப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு எந்த மாற்றங்களும் நிகழலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios