பாஜகவை கழட்டி விட்ட பவன் கல்யாண்! தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு! காலியான NDA கூடாரம்!
அதிமுகவைத் தொடர்ந்து ஜனசேனாவும் பாஜகவை விலக்கி வைத்திருக்கிறது. இது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் வியாழன் அன்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் இவ்வாறு கூறினார்.
"தெலுங்கு தேசம் வலுவான கட்சி. ஆந்திராவுக்கு நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை வழங்க தெலுங்கு தேசம் கட்சி தேவை. இன்று இக்கட்டான சூழலில் இருக்கும் அவர்களை ஆதரிப்போம். இச்சூழலில், தெலுங்கு தேசத்துக்கு, ஜனசேனாவில் உள்ள இளம் ரத்தத்தின் ஆதரவு தேவை" என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு ஜனசேனாவும் தெலுங்கு தேசம் கட்சியும் தான் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளில் ஒன்றான அதிமுக அண்மையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. (NDA) கூட்டணியில் இருந்து விலகியது. அதைத் தொடர்ந்து இப்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பாஜக கூட்டணியில் இருந்து அகன்றுவிட்டது.
கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றபோது, என்.டி.ஏ. டெல்லியில் போட்டிக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக அல்லாத ஒரே பெரிய கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்தது என்டிஏ கூட்டணியை உடைத்தது. அதன் தொடர்ச்சியாக ஜனசேனாவும் பாஜகவை விலக்கி வைத்திருக்கிறது. இது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
என்.டி.ஏ.வுடனாட உறவை முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் சந்தித்தார். கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த இந்தச் சந்திப்புக்குப் பின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் கைது நடவடிக்கை பழிவாங்கும் செயல் என்று விமர்சித்தார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுத்துறையில் ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்திற்குப் பிறகு பேசிய பவன் கல்யாண், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை தனது கட்சி ஆதரிக்கும் என்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை எதிர்த்துப் போராட, தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனாவின் கூட்டணியை தேவை என்றும் வலியுறுத்தினார். ஆனால், இப்போது பவன் கல்யாண் தனது கருத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சியுடன் மட்டும் கூட்டணியை உறுதிசெய்திருக்கிறார்.