jackpot gift to PV Sindhu

இந்திய பாட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான பி.வி.சிந்துவுக்கு தெலங்கனா அரசு சார்பில் ஆயிரம் சதுர அடி கொண்ட வீட்டு மனையை முதல்வர் சந்திரசேகர் ராவ் வழங்கினார்.

முதல்வரின் பிரகதி இல்லத்தில் நேற்று மாலை நடந்த எளிமையான நிகழ்ச்சியில் 1000 சதுர அடி மனைக்கான பத்திரத்தை சிந்துவிடம் முதல்வர் வழங்கினார்.

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில் சிந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு சிந்துவுக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்து, ஐதராபாத்தில் ஒரு வீட்டு மனையும் தருவதாகத் அறிவித்தது.

மேலும், சந்திரபாபு நாயுடு முதல்வராகஇருக்கும் ஆந்திரப் பிரேதச அரசும், சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசும், தலைநகர் அமராவதியில் ஒரு வீட்டுமனையும் தருவதாக அறிவித்தது.

மேலும், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் இருவரும் சிந்துவுக்கு அரசு வேலை தருவதாக அறிவித்தனர். ஆனால், சிந்துவின் தாயார், ஆந்திரமாநிலத்தில் மட்டுமே பணிபுரிய விருப்பம் எனத் தெரிவித்ததையடுத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு,சிந்துவுக்கு சப்-கலெக்டர் பதவி வழங்கப்படும் எனத் அறிவித்தார்

இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் ஐதராபாத்தில் ஆயிரம் சதுர அடி மனைக்கான பத்திரத்தை சிந்துவிடம் வழங்கினார். அது குறித்து சிந்து கூறுகையில், “ முதல்வர் சந்திரசேகர் ராவிடம் இருந்து இந்தமனையை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக சந்திரசேகர் ராவ், அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் ஊக்குவித்து வருகிறார். ரியோவில் இருந்து நான் நாடு திரும்பும்போது, ஐதராபாத் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு, கச்சிபவுளி அரங்கில் அளிக்கப்பட்ட வரவேற்பை என்னால் மறக்க முடியாது. ரூ. 5கோடி பரிசு கொடுத்து, இப்போது, நிலத்தையும் தெலங்கானா அரசு அளித்துள்ளது. இதற்கு மேல் நான் எதை எதிர்பார்ப்பது” எனத் தெரிவித்தார்.