குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்குவதற்கு அமைச்சர் சிவக்குமார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவக்குமாரின் வீடு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையின்போது பல கோடி ரூபாய், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. 
அமைச்சர் சிவக்குமாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சோதனையை விரைந்து முடிக்குமாறு அவரது சகோதரருரும், எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் டி.கே.சிவக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் வீடுகளில் இருந்து ரூ.11.43 கோடி, ரூ.4.44 கோடி மதிப்பிலான தங்க நகைகள், முக்கிய சொத்து பத்திரங்கள், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவக்குமாரிடம் நேற்று காலை வரை அதிகாரிகள் விசாரணை நடத்தி சில தகவல்களை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. அதன்பிறகு, தங்களது சோதனையை நிறைவு செய்து விட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றார்கள்.

இந்நிலையில் டெல்லி, பெங்களூரு என 64 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 300 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதில் ரூ. 100 கோடி சிவக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு சொந்தமானது என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மீதம் ரூ. 200 கோடி ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடையது என வருமான வரித்துறை கண்டுபிடித்து உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.