IT raid in lalu prasad home
மாஜி மத்திய மந்திரிகளான லாலு மற்றும் ப.சிதம்பரத்தின் சொத்துக்களின் மீது நேற்று நடந்த ரெய்டு தேசிய அரசியலில் பெரும் அதிர்வலை கிளப்பியிருக்கிறது.
இந்த ரெய்டு குறித்து ப.சி. வழக்கமான தனது வாழைப்பழத்தில் ஊசி செருகல் ஸ்டைல் விமர்சனத்தை நேற்றே சுடச்சுட வழங்கிவிட்டார். ஆனால் குறும்புக்கார லாலு, ரெய்டின் போது கொட்டிய லொள்ளு கமெண்டுகளை பற்றிய தகவல்கள் இப்போது கசிகின்றன.
லாலுவின் சொத்துக்கள் டெல்லி, குர்கான், ரிவாரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன. இவற்றில் சுமார் 22 இடங்களில் நூறு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு குறித்து ட்விட்டிய லாலு ‘’பா.ஜ.க.வுக்கு எதிரான என்னுடைய வாதங்களை கேட்க அந்த கட்சிக்கு தைரியம் கிடையாது. என் குரலை அடக்க நினைத்தால் பல கோடி லாலுக்கள் உருவெடுப்பார்கள்.
என்னை மிரட்டி பணிய வைக்க நினைக்க வேண்டாம். பீஹாரில் உள்ள அசுர பலமான எங்களின் கூட்டணியை பார்த்து பா.ஜ.க. நடுங்குகிறது. அதனால் அரசு இயந்திரத்தை ஏவி அதை உடைக்க பார்க்கிறது. ஆனால் அதை நான் அனுமதிக்க மாட்டேன்.
என் பெயரை கேட்டாலே நடுங்கும் பா.ஜ.க.வுக்கு என்னை நேரில் எதிர்க்க திராணி இல்லை. அதனால்தான் இந்த பைபாஸ் வேலை.’’ என்று போட்டுப் பொளந்தார்.
இது போக ரெய்டு நடந்து கொண்டிருக்கையில் தன் வீட்டை சுற்றி நின்ற கட்சித் தொண்டர்களையும், ஏரியா மக்களையும் ஓடியோடி விரட்டினார் லாலு.
ச்சும்மா ஜாலிக்காக இதை செய்தவர் ‘ஏன் உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா? லாலு வீட்டுல சினிமா ஷூட்டிங் நடக்குதுன்னு வந்துட்டீங்களா? என் கட்சிக்காரன் மட்டும் கொஞ்சம் தள்ளி நின்னு கவனிங்க. பொதுமக்களெல்லாம் ஓடிப்போயி வேலைய பாருங்க.” என்று சிரிக்க சிரிக்க விரட்டினார்.
பின் ரெய்டு செய்யும் அதிகாரிகளுக்கு உதவியாக வந்த டிரைவர்கள், பியூன் உள்ளிட்டோரை அழைத்து வைத்து பெயர், வேலை , சம்பளம் பற்றியெல்லாம் ஜாலியாக கேட்டாராம். பிறகு அவர்களிடம் ‘ என் வீட்டுல உங்க ஆபீஸருங்க என்னத்த தேடுறாங்க? ஒண்ணுமில்ல. என் வீடுகள்ள நிறைய மாடு இருக்குது.
நல்ல தரமான நெய் கிடைக்கும். கூடவே மாட்டு சாணமும் கிடைக்கும். சாணியை நிலத்துக்கு போடலாம், நெய்ய மனுஷன் சாப்பிடலாம்.” என்றதும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஊழியர் சிரித்துவிட்டாராம்.
உடனே அவரை தனியாக அழைத்து , மாட்டு சாணம் எந்தளவுக்கு உயர்ந்த உரம் என்று கிளாஸ் எடுத்த லாலு, போறப்ப உங்க வீடுகளுக்கு நெய் வாங்கிட்டு போறீங்களாப்பா? என்று லொள்ளாய் கேட்க அவர்களோ வாயை மூடிக்கொண்டு எஸ்கேப்பாகியிருக்கிறார்கள்.
கரெக்ட்தானே! இல்லேன்னா அவங்க காலனியிலேயும் ரெய்டை நடத்திடுமே கவர்மெண்டு.
