டெல்லி ஐஐடி கல்விநிறுவனத்தின் 50-வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே. சிவன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் இடையே நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பின். அப்போது அவரிடம் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ மீண்டும் முயற்சி செய்யுமா என்று ஊடகங்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,

"நிச்சயமாக. விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான தொழில்நுட்பத்தை செயல்முறையில் செய்து பார்க்க வேண்டும். நாங்கள் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது தொடர்பான திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்.


சந்திரயான் 2 திட்டம் முடிந்த கதையல்ல. ஆதித்யா எல்1 சோலார் மிஷன், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம், ஆகியவை சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது. பெரிய எண்ணிக்கையில் அதி தொழில்நுட்ப செயற்கைக் கோள் ஏவுதல் திட்டங்களும் வரும் மாதங்களில் கைகூடும்.

டிசம்பர் அல்லது ஜனவரியில் எஸ்.எஸ்.எல்.வி. தன் முதல் பயணத்தை தொடங்கலாம். 200 டன் செமி-கிரையோ இன்ஜின் சோதனை முயற்சிகள் விரைவில் தொடங்கவுள்ளது. மொபைல் போன்களுக்கான நேவிக் சிக்னல்கள் வழங்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. இது சமூகத் தேவைகளுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கும் பாதையைத் திறக்கும்" எனத்  தெரிவித்தார்

நிகழ்ச்சியில் சிவன் பேசுகையில் “ஒரே வாழ்க்கைதான் உள்ளது ஆனால் பல தொழில் தெரிவுகள் உள்ளன. உங்கள் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள உங்களது இயல்பான திறமை, உங்களுக்கு பிடித்தது எது ஆகியவற்றை அடையாளம் காணுங்கள். பணத்துக்காக ஒரு வேலையைத் தேர்வு செய்யாமல் உங்கள் மகிழ்ச்சிக்கான வேலையைத் தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் செய்வதைத் திறம்படச் செய்யுங்கள். வெற்றி பெறுவதற்கு அதன் மீதான பற்றுதல் ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியாது. உங்களுக்கு திறமைகளும் பலங்களும் வேண்டும். உங்களுக்கு இசையோ, கிரிக்கெட்டோ மிகவும் பிடித்ததாக இருக்கலாம். ஆனால் தீவிர போட்டி நிலவும் இசை, அல்லது விளையாட்டுத் துறைகளில் வெற்றி பெறுவதற்கான திறமைகள் உங்களிடம் உள்ளதா? என்பதை கண்டறியுங்கள்.

உங்கள் தொழில்-வாழ்வில் நீங்கள் வெற்றி பெற அதிபுத்திசாலியாகவோ, ஜீனியஸாகவோ இருக்க வேண்டியத் தேவையில்லை. முதலிடம் பிடிப்பவராகவோ முதல்நிலையில் தேறுபவர்களாகவோ இருக்க வேண்டிய தேவையும் இல்லை. நீங்கள் தவிர்க்க வேண்டியதெல்லாம் கவனச் சிதறலையும், நேர விரய காரியங்களையும்தான்.

பிறகு இன்னொன்று, இன்னொருவரைப் பார்த்து காப்பி அடிக்காதீர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடியனாக இருப்பது தற்போதைய மோஸ்தர் என்பதற்காக உடனே ஸ்டேண்ட் அப் காமெடியனாக வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதாவது நீங்கள் நேசிக்கும் ஒன்றிற்கும் உங்களுக்கு எது நன்றாக வரும் என்பதற்கும் இடையே சரிசம நிலையைக் கண்டுபிடித்துக் கொள்வதுதான் சரியான வழி. நீங்கள் ஒரே சமயத்தில் இசை ஆர்வலராகவும் திறமையான இன்ஜினியரகாவும் இருக்க முடியும்” என மாணவர்களுக்கு உத்வேகமூட்டினார்