சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை படம் பிடித்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்! இஸ்ரோ வெளியிட்ட புதிய புகைப்படம்!
DFSAR என்ற சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள முக்கிய கருவியில் ரேடார் இருக்கிறது. இதனால், அதன் மூலம் சூரிய ஒளி இல்லாமல் கூட படம் எடுக்க முடியும்.
சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள கருவி மூலம் எடுக்கப்பட்ட சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புதிய படத்தை சனிக்கிழமை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.
"செப்டம்பர் 6, 2023 அன்று சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கேமரா மூலம் எடுக்கப்பட்ட சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் படம்" என்று இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் இன்னும் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ளது. அதில் உள்ள DFSAR கேமரா சந்தியான்-3 விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு முன்பும் பின்பும் எடுத்த படங்களை ஒப்பிட்டு இஸ்ரோ பதிவிட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரோ சந்திரயான்-3 இன் லேண்டருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டருக்கும் இடையேயான தொடர்பு வெற்றிகரமாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இதனால், முழு வெற்றி அடையாத சந்திரயான்-2 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டர் சந்திரயான்-3 திட்டத்திற்கும் பயன்பட்டது.
DFSAR என்பது சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள ஒரு முக்கிய அறிவியல் கருவியாகும். இந்தக் கருவியைப் பற்றி விளக்கியுள்ள இஸ்ரோ, "இதில் ரேடார் இருப்பதால், சூரிய ஒளி இல்லாமல் கூட படம் எடுக்க முடியும். படம்பிடிக்கும் இலக்கின் தூரம் மற்றும் இயற்பியல் பண்புகளையும் கூட வழங்க முடியும். எனவே, பூமி மற்றும் பிற வான் பொருட்களின் தொலைநிலை உணர்தலுக்கு SAR பயன்படுத்தப்படுகிறது" என்று கூறியிருக்கிறது.
முன்னதாக பிரக்யான் ரோவரின் நேவிகேஷன் கேமரா பதிவுகள் அடிப்படையில் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கி இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.
நாசாவின் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் சாட்டிலைட்டும் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்தை படம் பிடித்துள்ளது. அதனை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அண்மையில் வெளியிட்டது.
ஜி20 மாநாட்டில் சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவமா! கடல்வழி பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனை!