ஜி20 மாநாட்டில் சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவமா! கடல்வழி பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனை!
சென்னையில் நடைபெற்ற நீலப் பொருளாதாரம் தொடர்பான கூட்டம் ஜி20 மாநாட்டில் சென்னை நகருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஜி20 உச்சி நாட்டில் இந்தியா எடுத்துள்ள முக்கிய முடிவுகளில் சென்னைக்கு சிறப்பான இடம் வழங்கப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும் கடந்த ஓராண்டு காலத்தில் நாடு முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டங்களின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று நீலப் பொருளாதாரம் அல்லது கடல்வழி பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியமானவை. சென்ற ஜூலை மாதம் சென்னையில் இரண்டு நாள் நடைபெற்ற G20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை (ECSWG) தொடர்பான மாநாட்டில் 9 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
உலக நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை அமைச்சர்கள் பங்கெடுத்த இந்தக் கூட்டத்தில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பது தொடர்பான முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
ஜி20 நாடுகளுடன் இணைந்த ஆப்பிரிக்க யூனியன்! ஜி21 என புதிய பெயர் வைக்கப்பட வாய்ப்பு
இந்தக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்பது கொள்கைகளை ஏற்றுக்கொள்வது கடல் பல்லுயிரியலைப் பாதுகாக்க உதவும் என்றும் G20 நாடுகள் கடல் சார்ந்த பொருளாதாரத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் நிவர்த்தி செய்யவும் உதவியாக இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்ட, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், "நிலையான மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்ட நீலப் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு வழிகாட்டும் கட்டமைப்பாக இந்தக் கொள்கைகள் செயல்படும்" என்று கூறியுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என்றும் அமைச்சர் பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
நீலப் பொருளாதாரம் என்பது கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட வாழ்வாதாரங்கள் ஆகியவற்றுக்கு கடல் வளங்களை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் ஜி20 மாநாட்டில் சென்னை நகருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், இந்தியா முயற்சிகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
இது தவிர, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான டெக்கான் உயர்நிலைக் கோட்பாடுகள், சுற்றுலாவுக்கான கோவா சாலை வரைபடம், நிலத்தை மீட்டெடுப்பது காந்திநகர் வரைபடம், சிறு குறு நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பான ஜெய்ப்பூர் நடவடிக்கை ஆகியவையும் ஜி20 உச்சி நாட்டில் இந்தியா எடுத்துள்ள முக்கிய முடிவுகளாகப் பார்க்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற ஜி20 மாநாடுகளில் நிகழாத புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பில் 73 முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. இவற்றின் இணைப்பாக 39 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா நடத்திய ஜி20 கூட்டங்களில் மொத்தம் 112 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஜி20 கூட்டமைப்பின் வரலாற்றிலேயே அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
- Blue Economy
- Chennai
- Chennai High-Level Principles for Blue/Ocean Economy
- Deccan High-Level Principles on Food Security and Nutrition
- Food Security and Nutrition
- Gandhinagar Implementation Roadmap for land restoration
- Goa Roadmap for Tourism
- Jaipur Call for Action to enhance MSMEs access to information
- MSMEs
- Ocean Economy