நிலவின் சிவசக்தி புள்ளியில் சுற்றும் ரோவர் பிரக்யான்: புதிய வீடியோ வெளியிட்ட இஸ்ரோ!
நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கிரீஸ் சென்றார். தனது கிரீஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வந்த அவர், நேரடியாக பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-2 தரையிறங்கியபோது, அதன் லேண்டர் மோதி விபத்துக்குள்ளான இடத்திற்கு திரயங்கா (Tiranga Point) என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி (Shiv Shakti Point) என்றும் பெயரிட்டார். மேலும், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ஆம் தேதி இனி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
நிலவில் தடம் பதித்த சந்திரயான் 3.. தேசிய விண்வெளி தினமாக மாறிய ஆகஸ்ட் 23 - பிரதமர் மோடி அறிவிப்பு!
இதனிடையே, பிரதமர் மோடி பெயரிட்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தனது X பக்கத்தில், “பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் அதன் ரகசியங்களைத் தேடுவதற்காக சிவசக்தி புள்ளியைச் சுற்றித் திரிகிறது.” என பதிவிட்டுள்ளது.
இஸ்ரோ தனது சமூக ஊடகப் பக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தைப் பற்றி தொடர்ந்து அறிவிப்புகளை அளித்து வருகிறது. திட்டமிடப்பட்ட அனைத்து ரோவர் இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டதாகவும், அது சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்து விட்டதாகவும் இஸ்ரோ நேற்று தெரிவித்திருந்தது.
ரோவர் பேலோடுகளான LIBS மற்றும் APXS ஆகியவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. APXS என்பது ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆகும், அதே சமயம் LIBS என்பது லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ் கோப்பைக் குறிக்கிறது.
முன்னதாக, விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறிய இரண்டு தனித்தனி வீடியோக்களையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.