நிலவில் தடம் பதித்த சந்திரயான் 3.. தேசிய விண்வெளி தினமாக மாறிய ஆகஸ்ட் 23 - பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியாவின் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து பேசியபோது தெரிவித்தார்.
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் இருந்து இந்தியா வந்தடைந்த சிறிது நேரத்திலேயே பெங்களூருவில் உள்ள ISTRAC மையத்தில் சந்திரயான் 3 வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் "மேக் இன் இந்தியா' திட்டத்தை நிலவு வரை கொண்டுசென்றுள்ளனர் நமது விஞ்ஞானிகள் என்று கூறினார். தென்னிந்தியாவிலிருந்து நிலவின் தென் துருவத்திற்குச் செல்லும் பாதை எளிதானது அல்ல என்று அவர் கூறினார். உங்கள் வெற்றியின் மூலம் இந்திய இளைஞர்களிடையே பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது என்றார் அவர்.
சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூரு வந்தடைந்தார் பிரதமர் மோடி
அதுவே வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளமாக அமையும் என்றும், சந்திரயான் 3 ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் இந்திய கொடியை ஏற்றி நிலையில் இனிமேல், அந்த நாள் இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் சந்திரயான் 3யின் ரோவர் நிலவில் தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்று கூறிய பிரதமர், சந்திரயான்-2 விண்ணில் இறங்கிய இடம் 'திரங்கா புள்ளி' என்றும் அழைக்கப்படும் என்றும் அறிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் சந்தித்தபோது சந்திரயான் 3 திட்ட தலைவர் வீரமுத்துவேல், பிரதமருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
அதே போல இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்களும் இந்திய பிரதமருக்கு மூன்று நிலவின் படங்களை நினைவு பரிசாக வழங்கினார். இன்று காலை பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, அங்கு பொதுமக்களிடம் உரையாற்றினார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரடியாக ISTRAC சென்று விஞ்ஞானிகளை சந்தித்து பேசிவிட்டு, பிறகு டெல்லி புறப்பட்டார்.
குட்டி சந்திரயான் 3 - இந்திய பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கிய தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல்!