இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சிஎம்எஸ்-03 என்ற அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள் கடற்படை மற்றும் ராணுவத்தின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும்.
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), இந்தியக் கடற்படை மற்றும் ராணுவத்தின் தகவல் தொடர்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சிஎம்எஸ்-03 (CMS-03) என்ற அதிநவீனத் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை 5.26 மணிக்கு சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு எல்விஎம்-3 (LVM-3 - ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. பல்வேறு கட்டங்களாகப் பிரிந்து சென்ற ராக்கெட், செயற்கைக்கோளை வெற்றிகரமாகத் திட்டமிட்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.
இந்தியா விண்ணில் செலுத்தி செயற்கைக்கோள்களில் மிகவும் அதிமான எடை கொண்ட சாட்டிலைட் CMS-03. அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை ஏந்திச் செல்வதால் LVM-3 ராக்கெட் பாகுபலி என்றும் அழைக்கப்படுகிறது.
ரூ.1,600 கோடியில் உருவாக்கப்பட்ட ‘சிஎம்எஸ்-03’
தற்போது பயன்பாட்டில் உள்ள ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக இந்தச் செயற்கைக்கோள் சுமார் ரூ.1,600 கோடி செலவில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ளது.
4,410 கிலோ எடை கொண்ட இந்த சிஎம்எஸ்-03 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள், குறைந்தபட்சம் 170 கி.மீ. முதல் அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவு கொண்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
புவிவட்ட சுற்றுப் பாதையில் ஏவப்பட்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களிலேயே, இதுதான் அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படைக்கு வலு சேர்க்கும் அதிநவீன அம்சங்கள்
இந்தச் செயற்கைக்கோளில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்பம் (Expanded Multi-band Technology) உட்படப் பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இந்திய ராணுவம் மற்றும் கடற்படையின் முக்கியப் பணிகள் மேலும் வலுப்பெறும்.
இந்தியாவின் கடலோர எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க இந்தச் செயற்கைக்கோள் உதவும்.
போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே பாதுகாப்பான, தடையற்ற தொலைத்தொடர்பு சேவையை இந்தச் செயற்கைக்கோள் மேம்படுத்தி வழங்கும்.
இஸ்ரோ இதுவரை நாட்டின் தகவல் தொடர்பு வசதிக்காக 48 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. புதிய சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளின் வெற்றி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
