‘சிவசக்தி முனை’: பெயரில் சர்ச்சைக்கு இடமில்லை - இஸ்ரோ தலைவர்!
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என பெயரிட்டதில் எந்த சர்ச்சையும் இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சந்திரயான்-2 தரையிறங்கியபோது, அதன் லேண்டர் மோதி விபத்துக்குள்ளான இடத்திற்கு திரங்கா முனை (Tiranga Point) என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை (Shiv Shakti Point) என்றும் பிரதமர் மோடி பெயரிட்டார்.
சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி எனவும், எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்படுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என பிரதமர் மோடி பெயரிட்டது சர்ச்சையாகியுள்ளது. நிலவின் வெற்றிகரமான பயணத்திற்கு மத சாயம் பூசுவது போல உள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நிலவின் அம்சத்துக்கு பெயர் வைக்க மோடிக்கு அதிகாரம் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், கோள்களுக்கு, குறுங்கோள்களுக்கு கடவுளர் பெயர்கள் வைப்பது உண்டு. இந்தியப் புராணப் பெயர்கள் மட்டுமல்ல, பல நாடுகளின் புராணப் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நிலவில் அவ்வாறு வைக்க இயலாது. சர்வதேச வானவியல் கழகம் அமைக்கப்பட்ட பின்னர், அக்கழகத்தின் விதிப்படிதான் பெயர் வைக்க இயலும். சர்வதேச வானவியல் கழகம் விதிகளின்படி, நிலவில் குறிப்பிட்ட இடத்துக்குப் பெயர் வைப்பதற்கென நிறைய விதிகள் உள்ளன; பெயர் வைப்பதற்கான விதிகள் வகுக்கப்பட்ட பிறகு, நிலவின் தரைப்பரப்புக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதை அந்த விதிகள் கூறுகின்றன. அதன்படி, சிவசக்தி என பெயர் வைக்க முடியாது எனவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்யும் சந்திரயான்3: இஸ்ரோ புதிய அப்டேட்!
இந்த நிலையில், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என பெயரிட்டதில் எந்த சர்ச்சையும் இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார். நிலவின் அம்சங்களுக்கு பெயர்கள் ஒதுக்கப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
வெங்கனூரில் உள்ள பௌர்ணமிகாவு-பத்ரகாளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா ஏற்கனவே நிலவு மண்டலங்களுக்கு சில பெயர்களை வழங்கியுள்ளது என்றும், நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாடுகள் பின்பற்றும் பாரம்பரியம் இது எனவும் கூறினார்.
“பெயர் வைப்பது இது முதல் முறை அல்ல. இந்தியப் பெயர்கள் ஏற்கனவே உள்ளன. சந்திரனில் சாராபாய் பள்ளம் உள்ளது. ஒவ்வொரு நாடும் தங்கள் பெயர்களைக் கொடுக்கலாம். பெயர் வைப்பது ஒரு மரபு. இந்த விஷயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை.” என சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.