இஸ்ரேல் பிரதமரின் பயண திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவே நப்தாலி பென்னெட் இந்திய பயணமும் ரத்தானது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் நாட்டு பிரதமர் நப்தாலி பென்னெட் தொலைபேசி வாயிலாக உரையாடினர். இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் இந்த வாரம் இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். எனினும், திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நப்தாலி பென்னெட் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் சமீபத்திய உலக நிகழ்வுகள், இந்தியா இஸ்ரேல் இடையிலான கூட்டணி என பல விஷயங்கள் பற்றி பேசினார். மேலும் இஸ்ரேல் பிரதமர் விரைவில் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். 

இத்துடன் சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்ததற்கும் பிரதமர் மோடி தனது வருத்தத்தை இஸ்ரேல் பிரதமரிடம் தெரிவித்து இருக்கிறார். 

அழைப்பு:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினர். அப்போது அப்தாலி பென்னெட் இந்தியா வர வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை அடுத்து ஏப்ரல் 2 ஆம் தேதி நப்தாலி பென்னெட் முதல் முறையாக அரசு முறை பயணமாக இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு:

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து இஸ்ரேல் பிரதமரின் பயண திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவே நப்தாலி பென்னெட் இந்திய பயணமும் ரத்தானது. 

தூதரகம்:

1992 ஜனவரி மாத வாக்கில் இந்தியா இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் தூதரகத்தை அமைத்தது. அன்று முதல் இந்தியா இஸ்ரேல் இடையே நட்புறவு இருந்து வருகிறது. எனினும், பல தசாப்தங்களாக இந்தியா இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடுநிலையாக இருந்து வந்தது. 

எனினும், 2014 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான நட்புறவு அதிகரித்தது. அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக அறியப்பட்டனர். தற்போது ஆசிய நாடுகளில் இஸ்ரேலுடன் அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

ஆயுதம்:

வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து கூட்டணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளன. இஸ்ரேலின் ராணுவ ஹார்டுவேர் மற்றும் ஆயுத முறைகள், ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியா வாங்கி வருகிறது. பாகிஸ்தான் உடனான கார்கில் போரின் போது இஸ்ரேல் இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கி இருக்கின்றது.