பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்சார்புக்காக உற்பத்தி, விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏழு முக்கிய துறைகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தற்சார்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் முக்கியமான ஏழு துறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார். உற்பத்தி, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை, கதி சக்தி, பாதுகாப்பு, பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம், இந்தியாவின் மென் சக்தி ஆகியவை இந்த ஏழு துறைகளாகும்.
இவை தனித்தனியாக செயல்படுவதைக் காட்டிலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்ந்தால், இந்தியாவின் உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்பதே இந்த அணுகுமுறையின் அடிப்படை நோக்கமாக உள்ளது. முதலாவது முக்கிய துறையாக உற்பத்தி மற்றும் தற்சார்பு பார்க்கப்படுகிறது. ஒரு பொருளின் வடிவமைப்பு முதல் உதிரிபாகங்கள் தயாரிப்பு வரை முடிந்தவரை முழுமையான உற்பத்திச் சங்கிலியை இந்தியாவுக்குள் உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகத் தரத்துடன் இருப்பதுடன், போட்டி விலையில் கிடைக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. மின்னணு சாதனங்கள், வாகனங்கள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி சார்பை குறைத்து, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்க முடியும்.
அடுத்ததாக விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு நிறுத்தாமல், அவற்றை பதப்படுத்தி கூடுதல் மதிப்பை உருவாக்கி உலகச் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். சிறுதானியங்கள், மசாலாப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு விவசாய நிலத்திலிருந்து ஏற்றுமதி சந்தை வரை ஒருங்கிணைந்த விநியோக அமைப்புகளை உருவாக்க முடியும்.
இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன், கிராமப்புறங்களில் பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய தொழில்களில் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இதனுடன் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோட்டிக்ஸ், தரவு மையங்கள் மற்றும் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடாக மாற வேண்டும் என்ற இலக்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நான்காவது துறையான கதி சக்தி, நாட்டின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதை மையமாகக் கொண்டது. சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால், பொருட்களை வேகமாகவும் குறைந்த செலவிலும் கொண்டு செல்ல முடியும். இதனுடன் பாதுகாப்புத் துறையிலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
ஆளில்லா விமானங்கள், அவற்றை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா தற்சார்பை நோக்கி நகர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதனால் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளும் உருவாகலாம். ஆறாவது துறையாக பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் முன்வைக்கப்படுகிறது.
பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து மற்றும் பசுமை உற்பத்தி ஆகியவற்றுடன் கடல் வளங்களையும் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். கடலோர சுற்றுலா, மீன்வளம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகளும் இதில் அடங்கும். ஏழாவது துறையாக இந்தியாவின் மென் சக்தி குறிப்பிடப்படுகிறது.
யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய கலாச்சாரம் ஏற்கெனவே உலக அளவில் நாட்டின் அடையாளத்தை வலுப்படுத்தியுள்ள நிலையில், விளையாட்டு, திரைப்படம், அனிமேஷன், காட்சித் தொழில்நுட்பம் மற்றும் படைப்புத் துறைகளிலும் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்க முடியும். இவ்வாறு உற்பத்தி முதல் தொழில்நுட்பம், விவசாயம் முதல் பாதுகாப்பு, பசுமை வளர்ச்சி முதல் கலாச்சார செல்வாக்கு வரை இந்த ஏழு துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வது இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு புதிய அடித்தளத்தை அமைக்கக்கூடும்.


