விவேகானந்தர் குறித்து சர்ச்சை கருத்து: இஸ்கான் துறவிக்கு தடை!
விவேகானந்தர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இஸ்கான் துறவி அந்த அமைப்பால் தடை செய்யப்பட்டுள்ளார்

சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது குரு ராமகிருஷ்ணா பரமஹம்சா ஆகியோரை விமர்சித்து பேசி சர்ச்சையில் சிக்கிய இஸ்கான் துறவி அமோக் லீலா தாஸை, கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கமான இஸ்கான் தடை செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சொற்பொழிவாற்றிய அமோக் லீலா தாஸ், சுவாமி விவேகானந்தர் மீன் சாப்பிடுவதை விமர்சித்து பேசினார். நல்லொழுக்கமுள்ள ஒரு நபர் எந்தவொரு உயிரினத்திற்கும் ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது என அவர் கூறினார். மேலும் சுவாமி விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ணா பரமஹம்சாவின் ‘பல கருத்துக்கள், பல பாதைகள்’ என்ற போதனை குறித்து கிண்டலடித்து பேசிய அமோக் லீலா தாஸ், ஒவ்வொரு பாதையும் ஒரே இலக்கை நோக்கிச் செல்வதில்லை என்றார்.
அமோக் லீலா தாஸின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது, பலரும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், “இஸ்கானை நாங்கள் மதிக்கிறோம். ராமகிருஷ்ணரையும் விவேகானந்தரையும் அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. துறவி என்று அழைக்கப்படும் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, அமோக் லீலா தாஸின் கருத்து இஸ்கான் அமைப்பின் கருத்து அல்ல என அந்த அமைப்பு விளக்கம் அளித்தது. “ஆளுமைகளின் சிறந்த போதனைகள் பற்றிய புரிதல் இல்லாமல் எங்களது துறவி பேசியுள்ளதை நினைத்து நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அவரது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.” என இஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அசோக் கெலாட் - சச்சின் பைலட் சமரசம்: ராஜஸ்தான் காங்கிரஸில் அதிரடி மாற்றம்!
மேலும், “அமோக் லீலா தாஸ் பேச்சின் தீவிரத்தையும் அவரது தவறையும் கருத்தில் கொண்டு, இஸ்கான் அவருக்கு 1 மாதம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. அமோக் லீலா தாஸ் தனது கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். தனது தவறை அவர் உணர்ந்துள்ளார்.” எனவும் இஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமோக் லீலா தாஸ் தனது தவறுக்காக கோவர்தன் மலையில் 1 மாதம் பிரயாச்சித்தம் தேடவுள்ளார். அதாவது பரிகாரம் செய்யவுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொது வாழ்க்கையிலிருந்து அவர் தன்னை முழுமையாக ஒதுக்கிக்கொள்வார் எனவும் இஸ்கான் தெரிவித்துள்ளது.
இஸ்கானின் துவாரகா பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் அமோக் லீலா தாஸ், ஒரு மென்பொறியாளர். மென்பொறியாளராக பட்டம் பெற்ற பிறகு, சில காலம் மென்பொருள் துறையில் பணிபுரிந்த அவர், ஆன்மீகம் மற்றும் இஸ்கான் அமைப்பால் ஈர்க்கப்பட்டு, பிரம்மச்சரிய சபதம் எடுத்து இஸ்கான் மூலம் ஆன்மீக சேவையாற்றி வருகிறார். ஆன்மீக பேச்சாளரான அமோக் லீலா தாஸ் ஊக்கமூட்டும் பேச்சுகளுக்கு பெயர் போனவர்.