நாட்டின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த கோர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. நாட்டின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசாவின் பாலசோரில் குறைந்தது 275 பேரைக் கொன்ற பயங்கரமான ரயில் விபத்து பற்றிய விசாரணை முடிந்துவிட்டதாக தெரிவித்தார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை அளித்தவுடன் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார். மேலும் பேசிய அவர், "பயங்கரமான சம்பவத்தின் மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான் தற்போது விவரங்களை சொல்ல விரும்பவில்லை. அறிக்கை வெளியே வரட்டும். மூல காரணமும் காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மட்டும் நான் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் சமூக ஊடகங்களில் பலர் தாங்களாகவே ஒடிசா ரயில் விபத்துக்கான காரணங்களையும் கோட்பாடுகளையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இந்த தகவல்கள் போலி மற்றும் தவறான செய்திகளுக்கு வழிவகுத்துள்ளன. அந்த வகையில் வேகமாக பரவி வரும் செய்தியில் "ரயில் விபத்துக்குள்ளானதில் இருந்து ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷாரிஃப்-ஐ காணவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியா டுடே நடத்திய உண்மை சரிபார்ப்பு சோதனையில் வைரலாகி வரும் தகவல் தவறானது என்பது தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள ஸ்டேஷனில் பணியில் இருந்த அதிகாரி எஸ்.பி. மொகண்டி ஆவார். பஹானகா பஜார் நிலையத்தில் முஸ்லீம் மூத்த அதிகாரிகள் எவரும் பணிபுரியவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.. வைரலான தகவலில் முகமது ஷாரீஃப் பணிபுரிந்ததாக கூறப்படும் ரயில் லையத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பஹானகா பஜார் ரயில் நிலையத்தில் முகமது ஷாரீஃப் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் அந்த ஸ்டேஷனில் இருந்து தலைமறைவானது பற்றிய நம்பகமான செய்தி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அந்த உண்மை சரிபார்ப்பு சோதனையில் தெரியவந்தது.
ஒடிசாவை தளமாகக் கொண்ட கலிங்கா டிவி வெளியிட்ட அறிக்கையின்படி, பஹானகா பஜார் நிலையத்தில் உதவி நிலைய மாஸ்டர் எஸ்பி மொகண்டி ஆவார். விபத்து நடந்த போது, எஸ்.கே.பட்நாயக், நிலைய மேலாளராக இருந்தார். பி.கே.பாண்டா, ஜே.கே.நாயக், எஸ்.பி.மொகண்ட்டி ஆகியோர் கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.
இந்தியா டுடேவிடம் பேசிய பட்நாயக், விபத்தின் போது எஸ்.பி. மொகண்டி பணியில் இருந்ததாகவும், விபத்துக்குப் பிறகு அவர் விசாரணைக்காக குர்தா சாலை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறினார். மேலும், விசாரணைக்குப் பிறகு எல்லாம் தெளிவாகத் தெரியும் என்றும் கூறினார்
பஹனகா பஜார் ஸ்டேஷன் கண்காணிப்பாளர் ஜே.கே. நாயக், இந்தியா டுடேவிடம் பேசிய போது “முகமது ஷாரீப் என்று யாரும் ஸ்டேஷன் விவகாரங்களைக் கையாளவில்லை. யாரும் தப்பியோடவில்லை. அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்கள். விபத்து நடந்தபோது ஸ்டேஷன் சூப்பிரண்டு இருந்த எஸ்.பி. மொகண்டியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
இதனிடையே ஜூன் 4 அன்று, ரயில் விபத்தை வைத்து வகுப்புவதா மோதலை தூண்டுவோரை ஒடிசா காவல்துறை முயற்சிப்பவர்களை எச்சரித்தது. "பாலாசோரில் நடந்த சோகமான ரயில் விபத்துக்கு சில சமூக ஊடகங்கள் வகுப்புவாத வண்ணம் கொடுப்பது கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒடிசா அரசின் ரயில்வே காவல்துறை விபத்துக்கான காரணம் மற்றும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
