ஒடிசா ரயில் விபத்து: காங்கிரஸ் கூறியது தவறு - ஐ.ஆர்.சி.டி.சி மறுப்பு!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் கூறிய தகவலை ஐஆர்சிடிசி மறுத்துள்ளது
ஒடிசா ரயில் விபத்தையடுத்து, ரயில் பயணத்தை ரத்து செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்த நிலையில், அதற்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேபோல், சிக்னல்கள் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. விரிவான விசாரணைக்கு பிறகு முழுமையான காரணங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது வருமானத்தை குறைத்து காட்டியதை ஒப்புகொண்ட பிபிசி இந்தியா.. எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல போகின்றன?
இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தில் ஒன்றாக பார்க்கப்படும் ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது. உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த பீகார், மனிப்பூர், மிசோரம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான பக்தசரண் தாஸ், ஒடிசா ரயில் விபத்து குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “கடந்த காலங்களில் இதுபோன்ற ரயில் விபத்துகள் நிகழ்ந்ததில்லை. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” என்றார்.
பக்தசரண் தாஸின் இந்த கருத்துக்கு ஐஆர்சிடிசி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது முற்றிலும் தவறானது. ரயில் பயணத்தை ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. கடந்த 01.06.23 அன்று 7.7 லட்சம் பேர் ரயில் பயத்தை ரத்து செய்த நிலையில், 03.06.23 அன்று ரயில் பயணம் ரத்து செய்தவர்களின் எண்ணிக்கை 7.5 லட்சமாக குறைந்துள்ளது.”என பதிவிட்டுள்ளது.