சிபிஐ கூடுதல் இயக்குனராக இருந்த அஜய் பட்நாகர், சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் பட்நாகர் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்தியப் பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
ஜார்கண்ட் கேடரை சேர்ந்த 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஜய் பட்நாகர், தற்போது சிபிஐ கூடுதல் இயக்குனராக உள்ளார். அவரை சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமனம் செய்து மத்தியப் பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி: நள்ளிரவில் கூடிய முஸ்லிம் சட்ட வாரியம்!
அதேபோல், ஐபிஎஸ் அதிகாரிகள் மனோஜ் சஷிதர் மற்றும் அனுராக் ஆகியோர் சிபிஐ கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிபிஐயின் இணை இயக்குநரான அனுராக், சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 24, 2023 வரை, அந்த பதவியில் அவர் நீடிப்பார் என பணிநியமன உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் கேடரை சேர்ந்த 1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மனோஜ் சஷிதர், சிபிஐ கூடுதல் இயக்குநராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சிபிஐ இணை இயக்குநராக உள்ளார்.
அதேபோல், சிபிஐயின் இணை இயக்குநரான ஷரத் அகர்வாலின் டெபுடேஷன் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்தியப் பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
