இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புத் திறன் கொண்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். 

ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய ஸ்கிந்தியா இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். 

“இதுபோன்ற நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த சூழலை எந்த மனிதரும் எதிர்கொண்டிருக்க கூடாது! இந்த விவகாரத்தை நானே முழுமையாக விசாரித்து வருகிறேன். விசாரணைக்கு பின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜோதிராதித்ய ஸ்கிந்தியா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இதோடு இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் சார்பில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

Scroll to load tweet…

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

விளக்கம்:

இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், “பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மே 7 ஆம் தேதி சிறப்புத் திறன் கொண்ட குழந்தை ஒன்று தனது குடும்பத்தினருடன் விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை. அவர் பீதியில் இருந்தார். கடைசி நிமிடம் வரை விமான ஊழியர்கள் அவரை அமைதிபடுத்த முயற்சித்தனர். எனினும், எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அவர் பயத்தில் இருந்தார்.”

“இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புத் திறன் கொண்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இண்டிகோ ஊழியர்களாக இருந்தாலும், வாடிக்கையாளர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துவதில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பெருமை கொள்கிறது,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பான பயணம்:

விமான நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு ஓட்டலில் தங்கும் வசதியை அளித்து, வசதியாக தங்க செய்து, இன்று காலை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானத்தில் அழைத்து சென்று இருக்கிறது. இதோடு சிறப்பு குழந்தை பயணம் செய்த விமானத்தில் பயணித்த மருத்து குழுவினர், பயணத்தின் போது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவசர சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்துள்ளனர்.