பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. பிரபல நகைச்சுவை நடிகரான பக்வந்த் மான் தற்போது முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யார் இந்த பக்வந்த் மான்..?ஒரே நாளில் இந்திய அளவில் கேட்கப்படும் இந்த ஒன்றை கேள்விக்கான பதிலை பார்ப்போம்...
பக்வந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சடோஜ் எனும் கிராமத்தில் பிறந்தவர். சின்ன வயதிலே சிறந்த பேச்சாளராக வலம் வந்துள்ளார். நகைச்சுவை கலந்து சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் விதத்தில் அமையும் இவரது பேச்சு பின்னாளில் இவருக்கு ஒரு புதிய அரசியல் பாதை காட்டியுள்ளது என்பதே நிதர்சனம்.
இடதுசாரி சித்தாந்தகளில் ஈர்க்கப்பட்ட இவர் , அரசியல் மற்றும் சமூகத்தின் பிரச்சினைகளை நையாண்டி பாடலாக பதிவு செய்து விற்பனை செய்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளி, கல்லூரிகளை தாண்டி பொது வட்டாரத்தில் பரிச்சியப்பட்ட முகமாக மாற தொடங்கினார் பக்வந்த் மான். கல்லூரி நிகழ்வுகளில் அவர் செய்த காமெடி ஷோ, நாளைடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது.'ஜுக்னு மஸ்த் மஸ்த்', 'ஜண்டா சிங்' போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக அரசியலில் அடித்தெடுத்து வைத்தார்.

அதாவது இந்த காமெடி ஷோவில் பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி கன்டென்ட்டாக மாற்றி இவர் நடித்து காட்டியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 'பீபோ புவா', 'பப்பு பாஸ்' போன்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் பகவந்த் மான் சிறப்பாக நடித்துள்ளார். ஜக்தார் ஜக்கி, ராணா ரன்பீர் ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ள பகவந்த் மான்,' நோ லைஃப் வித் வைஃப்' போன்ற மேடை நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.
2014ஆம் ஆண்டு பஞ்சாபில் புதிய கட்சியாக தனது கணக்கை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பக்வ்ந்த் மான். மேலும் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பக்வந்த் மான் இருந்து வந்தார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பஞ்சாப் முழுவதிலும் மக்கள் ஆதரவை பெற்றுள்ள அக்கட்சியின் ஒரே தலைவர் இவர்தான் என்பதே எதார்த்தம்.

மாநிலத்தின் மக்களுக்கு மத்தியில் நகைச்சுவை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்பட்ட இவர், பஞ்சாபில் உள்ள சங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி சார்பில் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில் தான் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் அறிவிக்கப்பட்டார். ஏனென்றால் பஞ்சாபில் கடந்த சில தேர்தல்களில் பக்வந்த் செயல்பாடுகளால் ஆம் ஆத்மி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 35 வார்டுகளில் 14 வார்டுகளை தனதாக்கி அபரா வெற்றி பெற்றது.

இந்த தேர்தல் ”உண்மையான பஞ்சாபை மீட்பதற்கான போர்" என பகத் சிங் மீது சத்தியம் செய்துகொண்டு, பஞ்சாப் சுதந்திர போராட்ட வீரர்களின் ட்ரேட் மார்க் மஞ்சள் தலைப்பாகையை அணிந்துகொண்டு 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்துடன் வீதிவீதியாக பிரச்சாரம் செய்தார் பக்வந்த் மான். இந்நிலையில் நடந்த முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, பகவந்த் மான் முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
குறிப்பாக கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் வலுவான அடித்தளத்தை கொண்டிருப்பவர் பக்வந்த் மட்டுமே. இதனால் போட்டியாளர்கள் ஏதுமின்றி, ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், தற்போது வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார். தனது காமெடி நிகழிச்சியில் இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்த 11 ஆண்டுகளில் முதலமைச்சர் ஆகவுள்ளார் பக்வந்த்.

பஞ்சாப் முதலமைச்சர் ஆக பொறுபேற்கவுள்ள பக்வந்த் மக்கள் நலனில் கவனம் செலுத்தி நல்லாட்சி செய்து மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
